கரூர் வழக்கில் “கில்லி”க்கு கிடைத்த முதல் வெற்­றி! அதிர்ச்சியில் ஆளும் கட்சி!…

12

கரூர் உயிர் பலி சம்பவத்தில் த.வெ.க கட்சியின் மீது ஒட்டு மொத்த பழியை போட்டு கட்சியையும், கட்சி தலைவர் விஜய்யின் சூறாவளி சுற்றுப் பயணத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்க ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் போட்ட திட்டம் ஒட்டு மொத்தமாக திட்டம் போட்டவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியதுடன், சம்பவம் நடந்து 15 நாட்களாக அமைதி காத்து உச்சநீதிமன்றத்தில் தான் நினைத்தபடி சிபிஐ விசாரணை உத்தரவை பெற்றதோடு அரசுக்கு பெரும் சிக்கலை த.வெ.க தலைவர் விஜய் உருவாக்கி விட்டதாக அரசியல் கட்சி தலைவர்களே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கையில் திட்டமிட்டு காய் நகர்த்துவதில் விஜய் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்துவிட்டார் எனவும் பாராட்டு கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தால் எந்தெந்த அரசியல் பிரமுகர்களும், காவல்துறை அதிகாரிகளும் சிக்கி கொள்ளப்போகின்றனர் என்கிற பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தை போல தேர்தல் பிரச்சார பாணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் திருச்சியில் மக்களை நேரடியாக சந்திக்க தொடங்கினார். இந்த கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் ஆளும்கட்சியோடு, எதிர்க் கட்சிகளையும் அதிரச் செய்துவிட்டது. இதனால் உற்சாகமடைந்த விஜய் அடுத்தடுத்து திருவாரூர், நாகூர் என தொடர் பிரச்சாரங்களை வாரத்தின் இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த தொடங்கினார்.

கரூரில் திமுக நடத்திய முப்பெரும் கூட்டத்திற்கு போட்டியாக விஜய் கரூரில் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் கரூர் மட்டுமின்றி கொங்கு மண்டலத்திற்கே பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் சதுரங்கத்திற்கு எதிராக விஜய் எப்படி கூட்டத்தை கூட்ட முடியும். கூட்டத்தை கூட்டினாலும் செந்தில்பாலாஜி எதாவது பிரச்சினையை கண்டிப்பாக ஏற்படுத்துவார் என அரசியல் கட்சி தலைவர்கள் கருதினர்.

முப்பெரும் விழாவிற்கு போட்டியாக கரூரில் கூடிய கூட்டத்தால் ஏற்பட்ட சந்தோசம் விஜய்க்கு நீடிக்கவில்லை. இவரை காண வந்த ரசிகர்கள், தொண்டர்கள் வெகுநேரமாக காத்திருந்தால் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே ஏற்பட்ட நெரிசல், இதன் பின்னர் பொதுமக்கள் பயந்து போய் ஓடத்தொடங்கியதால் ஏற்பட்ட சம்பவத்தால் 41 உயிர்கள் அநியாயமாக பறிபோனது. விஜய் இருக்கும்போதே பொதுமக்கள் மயங்கி விழ தொடங்கிய நிலையில் உயிர்பலி ஏற்பட்டதை அறிந்து சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்து சென்னைக்கு வந்துவிட்டார்.

41 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் நேரில் பார்த்து ஆறுதல் கூறாமல் சென்னைக்கு வந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இந்த சம்பவம் அறிந்ததும் மின்னல் வேகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்நாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றதோடு, முதல்வரும் இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.

உயிர்பலி ஏற்பட்டு ஒருநாள் முழுவதும் விஜய் எந்த கருதும் கூறாமல் அமைதி காத்ததால் இவர் மீது ஒட்டுமொத்த மக்களின் கோபமும் திரும்பியது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு அனுதாபம்கூட கூறாமல் விஜய் அமைதியாக இருப்பதன் மூலம் அரசியலுக்கு விஜய் சரிப்பட்டு மாட்டார் என விவாதம் கிளம்பியது. இதன் பிறகு அனுதாப அறிக்கையும், வீடியோவும் வெளியிட்டார் விஜய். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு விஜய்தான் முழு பொறுப்பு என்ற ரீதியில் ஆளும்கட்சி தனது ஆதரவு பத்திரிகைகள், டி.வி.க்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஒட்டுமொத்த பழியையும் விஜய் மீது வீசியது.

விஜய் வெளியிட்ட வீடியோவில் இந்த சம்பவத்தில் சில உண்மை கண்டிப்பாக வெளிவரும் என கூறி இருந்தார். இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளை அனுப்பியும், 50-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும், இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து உடல்களை எரித்தும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமயில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மறுநாளே நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் சதி வேலை நடந்திருப்பதாக சந்தேகம் இருப்பதாலும், தமிழக காவல்துறையினர் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க மாட்டார்கள் என கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதே போல தலைவர்கள் ரோடு ஷோ நடத்துவது தொடர்பாக நிலையான திட்டத்தை அரசு வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தது. அதேநேரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் ரோட் ஷோ தொடர்பான வழக்கு விசாரணையின் போது த.வெ.க தலைவர் விஜய் குறித்தும், இந்த கட்சி நிர்வாகிகள் குறித்தும் நீதிமன்றத்தில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவானது வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் அமைத்து உடனடியாக விசாரணை தொடங்கவும் உத்தரவிட்டார்.

இதன்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தொடங்கியது. இதை எதிர்த்து த.வெ.க சார்பில் அக்கட்சி பிரமுகர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ. விசாரித்தால் மட்டுமே நேர்மையான விசாரணையாக இருக்கும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான ஜெ.கே. மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அறிவித்தனர்.

இந்த தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே எதிர்பார்த்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆளும் திமுக மேலிடத்திற்கும், ஆட்சிக்கும் மிகவும் அவசியம் என கருதியதால் திமுக சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வில்சன், பிரபல முதல் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி ஆகியோர் அரசுக்கு ஆதரவாக ஆஜரானார்கள்.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கரூர் சம்பவத்தை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக பார்க்கிறோம். பாரபட்சம் இல்லாமல் விழிப்படை தன்மையுடன் விசாரணை வேண்டும் என கேட்பது குடிமக்களின் உரிமை. இந்த சம்பவம் நாட்டு மக்களின் மனதில் நிச்சயமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெருங்கிய உறவுகளை இழந்து நிற்பவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவேண்டி உள்ளது. இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் முக்கியதுவத்தை உணராமல் இதுகுறித்து ஊடகங்களில் போலீசார் தெரிவித்த கருத்துகளையும், அவற்றில் வெளிப்பட்ட அரசியல் தொனியும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை எதிர்கொள்ளும் மக்களின் மனதில் நிச்சயம் சந்தேகத்தை ஏற்படுத்தும். குற்றவியல் நீதி நடைமுறையில் புலன்விசாரணையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீட்க வேண்டும்.

இதுபோன்ற வழக்கில் புலன் விசாரணை முழுமையாகவும், சுதந்திரமாகவும், பாரபட்சமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டி உள்ளது. எனவே இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியுள்ளது.

கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுகிறது. வழக்கை புலனாய்வு செய்ய ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளை, அதே நேரத்தில் தமிழகத்தில் பிறக்காத அதிகாரிகளை சி.பி.ஐ. இயக்குனர் உடனடியாக நியமிக்க வேண்டும். கரூர் மாவட்ட எஸ்.பி., டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு, முதல்வர் ஏற்படுத்திய ஒருநபர் ஆணையம் ஆகியவற்றின் முதல் தகவல் அறிக்கை, இதுவரை சேகரித்த டிஜிட்டல் உள்ளிட்ட ஆதாரங்கள், ஆவணங்கள், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ. வசம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஒரு நபர் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. சி.பி.ஐ.க்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.

சுதந்திரமான பாரபட்சமற்ற விசாரணையின் நோக்கத்தை நிறைவேற்ற உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 நபர்கள் கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு சி.பி.ஐ. விசாரணையை கண்காணித்து விசாரணை தொடர்பான உத்தரவுகளை சி.பி.ஐ.க்கு பிறப்பிக்கும். சிபிஐ திரட்டும் ஆதாரங்களை அவ்வப்போது ஆய்வு செய்து புலன்விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டுவதை உறுதி செய்யவேண்டும்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் நியாயமான, வெளிப்படையான, சுதந்திரமான புலன்விசாரணையை உறுதி செய்வதற்கான அனைத்தையும் இந்த குழு உருவாக்க வேண்டும். குழுவுக்கும், சி.பி.ஐ.க்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும். கண்காணிப்பு குழு கூட்டத்தை கண்காணிப்பு குழு தலைவர் அஜய் ராத்தோகி பதவி ஏற்றதும் கூட்ட வேண்டும்.

புலன் விசாரணை தொடர்பான மாதாந்திர அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அளிக்க வேண்டும். இந்த அறிக்கையை கண்காணிப்பு குழு உச்சநீதிமன்ற பரிசீலனைக்கு தேவைப்படும்போது தாக்கல் செய்யும். புலன் விசாரணையை சட்டப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. காரணம் சிபிஐக்கு வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ராத்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்ற உத்தரவை பிறப்பித்ததுதான். இதன்மூலம் இந்த வழக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒருநபர் ஆணையத்துக்கு தடை விதித்துவிட்டதால் ஒட்டுமொத்தமாக வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றுவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக வழக்கை விசாரிக்க உள்ளனர். இதனால் இந்த வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்களும், கைது நடவடிக்கைகளும் இருக்கும் எனவும் தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் சதி வேலை நடந்திருப்பதாக த.வெ.க சார்பில் பல்வேறு ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்ததும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் வேண்டுகோள்தான் என்பதற்கான ஆதாரங்கள், செல்போன் பேச்சுக்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வழக்கில் சம்பவ இடத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் கரூரில் பேட்டியளித்திருந்தார். ஆனால் கூட்டத்தின் 60 பேர் மட்டுமே இருந்ததாக வீடியோ ஆதாரத்தையும் த.வெ.க கொடுத்துள்ளது. சி.பி.ஐ. இந்த பிரச்சினையை கையில் எடுக்கும்போது எந்தெந்த போலீசார் எங்கெங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் நின்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் போன் கால்கள் பதிவு உள்ளிட்டவைகளை சி.பி.ஐ. விசாரிக்கும்.

அப்போது காவல்துறை கொடுத்த பாதுகாப்பு வெளிப்பட்டுவிடும். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து கலவரத்தை ஏற்படுத்தியதாக த.வெ.க ஆதாரங்களை கொடுத்துள்ளது. எனவே இந்த வழக்கு ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி, மாவட்ட முக்கிய பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பெரிய சிக்கலாகவே மாறப்போகிறது. இவர்கள் கண்டிப்பாக விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படும்போது பெரிய பிரச்சினைக்கு ஆளாவார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

மேலும் இந்த தீர்ப்பு குறித்து கருது தெரிவித்துள்ள த.வெ.க தலைவர் விஜய், ஒரே வார்த்தையில் “நீதி வெல்லும்” என ரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் எழுந்த போதும் எந்த பதிலும் கூறி பதில் சர்ச்சையை ஏற்படுத்தாமல் அமைதி காத்து சாதித்துவிட்டதாக த.வெ.க தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டுகின்றனர்.

இந்த வழக்கு விசாரணையில் ஏற்படும் பல்வேறு திருப்பங்களும் த.வெ.க அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்லவும், ஆளும்கட்சிக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். வரும் மாதங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது