ஹால் டிக்கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்வம்: குணங்குடி மஸ்தான் தர்காவில் ஆலிம் புலவரின் அற்புதங்கள்
பரந்து விரிந்த சென்னைப் பட்டணத்தில் சிறந்த இறைநேசராக வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய அதிசய சித்தர்களில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ். பக்தர்களால் குணங்குடியார் அப்பா என்றும் பாவா என்றும் அன்புடன் அழைக்கப்படும் குணங்குடியார் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் இறை மீது ஏற்பட்ட அதீத காதலால் ஆடம்பர வாழ்வைத் துறந்து அல்லாஹ்வைத் தேடி காடு, மலை, குப்பைமேடுகள் என அலைந்து திரிந்தார்.
கிபி. 1788 ஆம் ஆண்டு ராமநாதபுரம், தொண்டியில் பிறந்து தனது 17 வது வயதில் துறவறம் பூண்டு, முக்தி பெற்று, இறுதியாக தனது 50 ஆவது வயதில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டைக்கு வந்து (அந்த காலத்தில் தண்டையார்பேட்டை) வந்து ஜீவ அடக்கமானார். குணங்குடி மஸ்தான் சாஹிப் இந்தப் பூவுலகை விட்டு மறைந்து 187 ஆண்டுகள் ஆனாலும் அவரது ஆன்மாவின் புகழ் இன்னும் மங்காமல், அவர் ஜீவ சமாதி ஆகியிருக்கும் அவரது தர்காவில் நிலைத்து நிற்கிறது.
குணங்குடி மஸ்தான் தர்காவில், அவரது கலீபா ஷெய்ஹ் அப்துல் காதிர் நைனார் லெப்பை ஆலிம் புலவர், குணங்குடியாரின் சீடர் ஊமையப்பா என்கிற ஹஸ்ரத் ஷேக் இப்ராஹிம் மற்றும் அவருக்கு பணிவிடை செய்து வந்த காதர் மஸ்தான் மற்றும் அவரது மனைவி மதார் பீவி அம்மா ஆகியோரது அடக்கத்தலங்கள் உள்ளன.
இவர்களில் நைனார் லெப்பை ஆலிம் புலவர் ஜீவ சமாதி முன்பு நடக்கும் அதிசயங்கள் வியக்க வைப்பதாக அங்கு வழக்கமாக வந்து செல்லும் பக்தர் கோடிகள் தெரிவிக்கின்றனர். ஆலிம் புலவர் ஜீவ சமாதிக்கு சென்றால் நோய், நொடிகள் தீர்வது மட்டுமின்றி இளைஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட கோரிக்கைகளும் நிறைவேறுகிறது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தை பெற்றுத் தரும் டிஎன்பிஸ்சி, யூபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் ஆலிம் புலவர் ஜீவ சமாதிக்கு ஹால் டிக்கெட்டுடன் வந்து மனமுறுகி வேண்டுகின்றனர். அது மட்டுமின்றி சிஏ தேர்வு மற்றும் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் ‘நீட்’ தேர்வு எழுத வரும் மாணவர்கள் நைனார் லெப்பை ஆலிம் புலவர் சமாதிக்கு வந்து தங்களது ஹால் டிக்கெட்டை வைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தேர்வில் வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியுடன் வந்து ஆலிம் புலவர் பாவாவுக்கு நன்றி சொல்லி விட்டுச் செல்வதை பார்க்க முடிகிறது. மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதும் பேனாவை ஆலிம் புலவரின் சமாதி மீது வைத்து வேண்டிக் கொண்டு சென்றால் அவர்களுக்கு நிச்சயம் வெற்றியே கிட்டுகிறது. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்தால் நிச்சயம் குழந்தை கிட்டுகிறது என்கின்றார் குணங்குடி மஸ்தான் தர்கா ஷரீப்பை மூன்றாவது தலைமுறையாக பராமரிக்கும் நிர்வாகி ரமிஸா.
மேலும் அவர் கூறியதாவது, ‘தெளிவாக வாய் பேச முடியாமல், திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகள், படிப்பில் ஆர்வமின்றி, மந்தமாக உள்ள குழந்தைகளை ஆலிம் புலவர் அப்பா சமாதிக்கு அழைத்து வந்தால் அவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாக மாறுகிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆலிம் புலவர் சமாதியின் தலைப்பகுதியில் தேன் பாட்டிலை வைத்து இறைவனை வேண்டி அந்தத் தேனை குழந்தையின் நாக்கில் தடவி உண்ணக் கொடுத்தால் அவர்கள் விரைவில் நலம் பெறுகிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் உள்ளது.
நைனார் லெப்பை ஆலிம் புலவரும், குணங்குடியாரும் சிறு வயதில் ஒன்றாக கல்வி பயின்று வந்துள்ளனர். அப்போது ஆலிம் புலவருக்கு சரியாக படிப்பு வராததால் அவரை ஆசிரியர் வகுப்பில் இருந்து விரட்டியடித்து விட்டார். இதனால் கோபமடைந்த ஆலிம் புலவர் காட்டுக்குள் சென்று விட்டார். அங்கு அவர் அசந்து உறங்கிய நேரம் அங்கு வந்த பாம்பு ஒன்று ஆலிம் புலவரின் நாவில் தீண்டி, எழுதி விட்டு சென்றுள்ளது. அதன் பின்னர் ஆலிம் புலவர் கல்வியில் சிறந்த மாணாக்கராக விளங்கினார் என்ற கருத்தும் நிலவுகிறது என்கின்றனர் குணங்குடியார் தர்கா வாரிசுகள்.
தண்டையார்பேட்டை குணங்குடி மஸ்தான் தர்காவில் சத்தமின்றி நடந்து வரும், இத்தகைய அதிசயங்களும், ஆச்சர்யங்களும் அங்கு வழக்கமாக பய பக்தியுடன் வந்து செல்லும் பக்தர்களுக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. நம்பி வருபவர்களை குணங்குடியார் கை விடுவதில்லை. ஞானம் தேடி வந்தவர்களுக்கு ஞானமும், குறை தீர்க்க கோரி வருபவர்களுக்கு தான் பெற்ற இறை அருளால், நிறைகளையும் செய்து கொடுக்கிறார் குணங்குடி மஸ்தான்.
குணமுடன் வந்து குணங்குடியாரை குடி கொண்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பதுதான் குணங்குடி மஸ்தான் தர்காவுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.