சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் பாரில் நடந்த அடிதடி தகராறில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், அஜய் வாண்டையார் மற்றும் பிரபல ரவுடி கானத்தூர் தூண்டில் ராஜா. சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் வந்தன. மேலும் அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் பாரில் நடந்த தகராறு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிமுக பிரமுகர் பிரசாத் பெரிய அளவில் நெட் ஒர்க் அமைத்து சினிமா நடிகர்களுக்கு சினிமா கெட்டூ கெதர் பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் கிளம்பின. இதுதொடர்பாக போலீசார் பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சூழ்நிலையில் நுங்கம்பாக்கம் காவல் எல்லையில் சென்னை நகர போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவான இணை ஆணையர் தர்மராஜன் .மேற்பார்வையிலான தனிப்படையினரிடம்
பிடிபட்ட நைஜீரியர் ஜான் மற்றும் பிரதீப் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் பிரசாத்துக்கு ரெகுலராக கொக்கய்ன் சப்ளை செய்து வந்தது. இதன் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் பிரசாத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த பல ஆண்டுகளாக பிரசாத்திடம் கொக்கய்ன் கஸ்டமராக இருந்து வந்தது தெரியவந்து.
மேலும் பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து தீங்கரை” தீங்கரை” என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், அந்தப் படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் நடிகர்களுக்கு பிரசாத் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை நகர போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அவருக்கு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனையடுத்துதான் நடிகர் ஸ்ரீகாந்த்தை போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் துணைக்கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
அதிமுக பிரமுகர் பிரசாத் கொக்கய்னை பெங்களூருவில் இருந்து 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து சென்னையில் உள்ள சினிமா பிரமுகர்களுக்கு ரூ. 12 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த், பிரசாத்திடம் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் செலுத்தியதற்கான பணப்பரிவர்த்தனைகளையும் போலீசார் கண்டுபிடித்து சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை எனவும், அவரிடம் விசாணை நடந்து வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் வாங்கிப்பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு நடிகர் ஒருவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்களாம். ஸ்ரீகாந்த் வீட்டில் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டால் அவர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்கின்றது காவல்துறை தரப்பு.