கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றெல்லாம் வீரா வேசம் பேசிவிட்டு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு அமித்ஷாவின் வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியதால் அவரை பாஜக கட்சி மிரட்டி கட்டுப்படுத்தி விட்டதாக பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது. அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.
கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை தேர்தலில் திடீரென கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டதால் அதிமுக மீண்டும் மெஜாரிட்டியை பிடிக்க முடியாமல் திமுகவிடம் ஆட்சியை இழந்தது.
கிட்டத்தட்ட 20 தொகுதிகளுக்கு மேல் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் திமுக வெற்றிபெற்ற ஓட்டுக்களைவிட அதிகம். இதனால் எடப்பாடியின் வீம்பு காரணமாக அதிமுக ஆட்சியை இழக்க நேரிட்டதாக குற்றசாட்டு இழந்தது. அதே நேரத்தில் டிடிவி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு அதிமுக ஆட்சியை கவிழ்த்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
தனித்து அதிமுக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன்பின்னர் சென்னை வந்த அமித்ஷா அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாகவும், வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி ஆட்சி நடக்கும் எனவும் பேட்டியளித்தார். ஆனால் பாஜ கட்சியுடன் தேர்தல் கூட்டணி மட்டுமே வைத்துள்ளோம். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி பல்டியடித்தார். இதனால் தற்போதுவரை அதிமுக, பாஜ கூட்டணி தாமரை இல்லை தண்ணீரைப்போல பொறுந்தாமல்தான் சென்றுகொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், துணை பொது செயலாளருமான செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எடப்பாடியார் மீண்டும் கட்சியில் இணைத்து ஒற்றுமைப்படுத்தவேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். இல்லையேல் வரும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற முடியாது.
அதிமுகவை ஒன்று சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே முன்னின்று கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கப் போவதாக செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கால அவகாசம் தருவதாகவும் செங்கோட்டையன் அறிவித்தார்.
எதிர்பாராதவிதமாக 10 நாட்களுக்கு முன்பே செங்கோட்டையனையே கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்து விட்டார். கட்சியை ஒன்றிணைக்க நினைத்த செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீங்கியதால் அதிமுகவில் தன்னை தவிர வேறு யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டதைப்போல தானும் செயல்படுவேன் என காட்டிக் கொண்டார் எடப்பாடி.
ஆனால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். இவர்களது சந்திப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தான் கட்சியை விட்டு நீக்கிய பிறகு அமித்ஷா சந்தித்ததன் மூலம் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறது. இதை அனுமதிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாதுரை பிறந்தநாளில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை சிலர் அழிக்க பார்த்தார்கள். அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம். இதை இம்மியளவு கூட விட்டு கொடுக்க மாட்டேன். சிலரை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த கைக்கூலிகள் யார் என்று அடையாளம் கண்டுகொண்டோம்.
இந்த கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என ஆவேசமாக பேசினார். இதன்மூலம் தனது கட்சி விவகாரத்தில் தலையிடும் பாஜ கட்சிக்கு எச்சரிக்கை விடுவதாக இருந்தது. ஆனால் திடீரென டெல்லியில் இருந்து வந்த அழைப்பு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி 2 நாட்களுக்கு முன்பு அவசரமாக புறப்பட்டு சென்றார். இரவில் அமித்ஷாவின் வீட்டில் நடந்த 20 நிமிட சந்திப்பின்போது செங்கோட்டையனை சந்தித்தது குறித்து தனது அதிருப்தியை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்த்து போட்டியிட்டால் மட்டுமே கூட்டணி வெற்றிபெற முடியும். ஓட்டுக்கள் பிரிந்து போவது திமுகவிற்குத்தான் சாதகம். எனவே பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முயற்சி செய்யுங்கள் . இல்லையேல் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துவிட்டால் அதிமுகவை உடைக்க முயற்சிப்பார்கள். இதனால் அதிமுக உங்கள் கையைவிட்டு சென்றுவிடும் என அமித்ஷா எச்சரித்துள்ளார்.
கூட்டணி பலமாக இருப்பதுடன், திமுகவை பலவீனப்படுத்த டாஸ்மாக் ஊழல் வழக்கும், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மத்திய அமலாக்கத்துறை, சிபிஐ வசம் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவற்றை பயன்படுத்தி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சியை விட்டு அகற்றியதைப்போல அகற்ற பாஜக நடவடிக்கை எடுக்கும். எனவே பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுங்கள் என அமித்ஷா மத்திய உளவுத்துறை அறிக்கை ஆதாரங்களுடன் எடப்பாடியிடம் கண்டிப்பான உத்தரவாகவே தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் இந்த ஆவேசத்தால் எடப்பாடி பழனிச்சாமி அரண்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது முகத்தில் கர்ச்சீப் வைத்து மூடிக்கொண்டு சோகத்துடன் எடப்பாடி வெளியே புறப்பட்டு வந்துள்ளார். இதை டிடிவி தினகரன் கேலியாக, இனி எடப்பாடியார் என அழைக்காமல் முகமூடியார் என அழைக்கலாம் என கூறி எடப்பாடி பழனிசாமியை மேலும் ஆவேசப்படுத்திவிட்டார்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்தும், தேமுதிக, பாமக உள்ளிட்ட காட்சிகளை கூட்டணியில் சேர்த்தும் போட்டியிட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். இல்லையேல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து மத்திய அரசுக்கும், அதிமுகவிற்கு பெரிய தலைவலியை கொடுப்பார்கள்.
எனவே பிரிந்து சென்றவர்களை கண்டிப்பாக கட்சியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் த.வெ.க கட்சியும் வரும் சட்டசபை தேர்தலில் பெரும் தலைவலியாக இருக்கும். இவர்கள் தனித்து போட்டியிட்டால் அதிமுக கூட்டணிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவார். இதையெல்லாம் யோசித்து முடிவெடுங்கள் என அமித்ஷா கண்டிப்புடன் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அமித்ஷா பேச்சை மீறமுடியாமல் எடப்பாடி திரும்பி வந்து அமைதியாகி விட்டார். இவர் கட்சியை ஒட்டுமொத்தமாக பாஜ கட்சியிடம் அடகு வைத்துவிட்டார் என அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். ஒருபுறம் பாஜ கட்சியின் நெருக்கடியும், மறுபுறம் கட்சி மூத்த நிர்வாகிகளின் கெடுபிடி என சிக்கி திணறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நெருக்கடிகளில் இருந்து இவர் எப்படி மீளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.