குமரி காளி கோயிலுக்கு ரத யாத்திரை: இருமுடி கட்டி பக்தர்கள் நடைபயணம்

கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் அமைந்துள்ள பத்துகாணி மலையில் தென் இந்தியாவின் புனித ஸ்தலமான காளிமலை கோயில் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த இக்கோவிலுக்கு கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.கொண்டைக்கட்டிமலை, கூனிச்சி மலை, வரம்பொதி மலை ஆகிய மூன்று மலைகளும் ஒன்றாக அமைந்திருக்கின்ற காளிதேவி கோயிலில் தர்மசாஸ்தா, நாகயக்‌ஷி, அகஸ்தியர் சந்நிதிகள் அமைந்துள்ளன.இங்கு வற்றாத காளி தீர்த்தம் காணப்படுகிறது.

இக்கோவிலில் சித்திரா பௌர்ணமி பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அதே போன்று துர்காஷ்டமி திருவிழாவும், சமுத்ரகிரி ரதயாத்திரை நிகழ்ச்சியும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சமுத்ரகிரி ரத யாத்திரை மூன்று தினங்களுக்கு முன் கன்னியாகுமரியில் இருந்து துவங்கியது. இதில் கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் இருந்து சமுத்திர பூஜையுடன் புனித கும்பம் நிறைத்தல், இருமுடி கட்டு, சந்தனக்குடம் நிறைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான ஆண் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டியும், குங்கும குடம்,பஸ் மகுடம்,சந்தன குடம் ஏந்தியும் யாத்திரையாக சென்றனர் . கன்னியாகுமரியில் இருந்து துவங்கிய ரத யாத்திரை 4 நாட்கள் நடைபயணமாக 100 கிலோமீட்டர் சென்று அதன் பின்னர் 3500 அடி உயரத்தில் உள்ள மலை ஏறி 29 ம்தேதி காளிமலை சென்றடைகிறது.

மூன்றாவது நாள் யாத்திரை ஆற்றூர் பகுதியை எட்டியதை தொடர்ந்து வழி நெடுக தீபாராதனை கொடுத்து பக்தர்கள் வரவேற்பு அளித்தனர் .இந்த காளி மலை மார்த்தாண்ட வர்மா மஹாராஜா இந்த பகுதியில் எதிரிகளிடம் இருந்து தன்னை தற்பாதுகாத்து கொள்ள அடைக்கலம் அடைந்தபோது காளி தேவி காட்சி கொடுத்து எதிரிகளிடம் இருந்து மன்னரை பாதுகாத்தாகவும், அங்கு மறைந்து வாழ்ந்த காலத்தில் பழங்குடியின மக்கள் மன்னருக்கு பல உதவிகள் செய்ததால் பழங்குடி மக்களுக்கு இந்த மலையில் 600 ஏக்கர் செம்பு பட்டயம் பதித்து கொடுத்ததாகவும் வரலாறு குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற்ற யாத்திரையில் இந்து முன்னணி பாஜக ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment