நிரந்தர டிஜிபி பட்டியல் வந்தும்…. உள்­ளடி வேலையில் உள்வட்ட அதிகாரிகள்….

தமிழக காவல்துறை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான 3 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்து ஓரிரு நாளில் அறிவிப்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொறுப்பு டிஜிபியை நிரந்தர டிஜிபியாக நியமிக்க முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் போட்ட திட்டம் தோல்வியடைந்ததால் குறிப்பிட்ட சீனியர் டிஜிபிக்கு நிரந்தர டிஜிபி பதவி கிடைக்காமல் தடுக்கும் வேலையில் இந்த அதிகாரிகள் இறங்கிவிட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் குமுறுகின்றனர்.

தமிழக காவல்துறைக்கு தலைமை பொறுப்பு வகிப்பவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆவார் . தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற நிலையில் இவருக்கு பதிலாக புதிய டிஜிபியை சீனியர் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 5 பேரில் இருந்து தேர்வு செய்ய 3 மாதத்திற்கு முன்பே மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஆனால் தற்போது சீனியர் பட்டியலில் உள்ள 5 பேருக்கு பதிலாக ஜூனியர் டிஜிபியை தேர்வு செய்வது அல்லது பொறுப்பு டிஜிபியை நியமித்து ஜனவரி மாதம் வரை பதவி வகிக்க செய்ய வேண்டும் என முதல்வர் உள்வட்ட ஐ.எஸ்.எஸ். அதிகரிகள் மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ரகசிய திட்டம் தீட்டி நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க வைத்தனர். இந்த டிஜிபி நியமனதிற்கு ஒட்டுமொத்த சீனியர் டிஜிபிக்களும் எதிர்ப்பு தெரிவித்து பொறுப்பு டிஜிபி நியமனத்தை புறக்கணித்தனர்.

பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக புதிய டிஜிபி பட்டியலை தயார் செய்து மாநில அரசுக்கு அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்கபட்டது. இதன்படி தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோட், வன்னிய பெருமாள், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்ட 8 பேர் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்படைத்தது . கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வு கூட்டம் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு டிஜிபி பட்டியலில் இருந்த வன்னிய பெருமாள் பெயரை குற்றசாட்டு கூறி அவர் பெயரை நீக்கினர். இதனால் 6-வது சீனியரிட்டி பட்டியலில் இருந்த பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் 5 பேர் பட்டியலுக்குள் வந்தார். இதன் பிறகு நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய கூட்டத்தில் முதல் இரண்டு பேர் பேர் மீதும் குற்றசாட்டு கூறி அவர்கள் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்க முயற்சித்தனர். ஆனால் தமிழக அரசின் குற்றசாட்டுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்க மறுத்ததோடு பட்டியலை சரி பார்த்து அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் கூறி தமிழக தலைமை செயலாளரை அனுப்பி விட்டனர் .

இந்த பட்டியலை சரிபார்த்த மத்திய பணியாளர் தேர்வாணையம் 3 பேர் பட்டியலை தேர்வு செய்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் சீனியர் டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அக்ரவால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோட் ஆகிய 3 பேர் பட்டியல்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும்படி மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது. முதல்வர் ராமநாதபுரத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டதால் டிஜிபி பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் வழக்கம்போல டிஜிபி பட்டியலில் குளறுபடியை தொடங்கிய முதலவர் உள்வட்ட அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்வதிலும் குளறுபடி செய்ய தொடங்கி விட்டதாக டிஜிபி வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைய பட்டியலின்படி முதல் இடத்தில் உள்ள சீமா அகர்வால், இரண்டாம் இடத்தில் உள்ள ராஜிவ் குமார் இருவருக்குமே சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி அதிக அனுபவம் கிடையாது.

பெரும்பாலும் விங் எனப்படும் பல்வேறு பிரிவுகளில்தான் இவர்கள் பணியாற்றி உள்ளனர். 3-வது இடத்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோர் ஏற்கனவே துணை ஆணையர், இணை ஆணையராக சென்னை மாநகரில் பணியாற்றினார். தேசிய பேரிடர் மேம்பாட்டு ஆணையத்தில் 7 ஆண்டுகள் அனுபவம் உண்டு. திமுக ஆட்சி ஏற்பட்டதும் ஆவடி மாநகர காவல் ஆணையகம் தொடங்கப்பட்ட பிறகு முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இவர் காவல் ஆணையராக இருந்த போது பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையான விவகாரத்தை சரியாக கையாளவில்லை என கூறி அதிரடியாக தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் தமிழகம் முழுவதும் நன்கு பரிச்சயமான அதிகாரி இவர் மட்டுமே. காவல்துறை அதிகாரிகள் முதல் கீழ்மட்ட போலீசார் வரை நல்ல அதிகாரி என பெயர் எடுத்தவர். இவர் பெயரை பட்டியலில் சேர்க்காமல் சீமா அகர்வால் அல்லது ராஜீவ் குமார் ஆகிய இருவரில் ஒருவரையே டிஜிபியாக நியமிக்க வேண்டும் என இந்த உள்வட்ட அதிகாரிகள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் காய் நகர்த்த தொடங்கிவிட்டனர். பொறுப்பு டிஜிபியாக நியமித்த ஒரு மாதத்திற்குள் கரூரில் விஜய் பொதுக்கூட்டத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயல்பட்டதால் 41 உயிர்களை அநியாயமாக பறிகொடுக்க நேரிட்டது.

இந்த சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க காவல்துறை அலட்சியமும் , கண்டுகொள்ளாததும் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இவ்வளவு பெரிய உயிர் சேதம் நடந்த பிறகும் சம்பவ இடத்திற்கு செல்லவேண்டிய பொறுப்பு டிஜிபிக்கு பதில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியை அனுப்பி வைத்துவிட்டு டிஜிபி அலுவலகத்தில் இருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கையாள தெரியவில்லை என்ற குற்றசாட்டு தற்போது எழுந்துள்ள நிலையில் மீண்டும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எந்த முன் அனுபவமும் இல்லாத அதிகாரியை நிரந்தர டிஜிபியாக நியமிக்க வேண்டும் என இந்த முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் கங்கணம் கட்டி திரிவது ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு எப்படி சீர்கெட்டு போனாலும் தங்கள் விரும்பியபடிதான் அதிகாரிகள் நியமனம் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப முதல்வரின் மனதை மாற்ற முயற்சி நடக்கிறதாம். இவர்கள் விருப்பப்படி அதிகாரி நியமிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

தனி நபர்களின் விருப்பத்தை விட மாநில மக்களின் அமைதி, சட்டம் ஒழுங்குதான் முக்கியம் என்பதை முதல்வர் உணர வேண்டும். தற்போது நடந்த கரூர் சம்பவத்திற்கு இந்த அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம் என்பதை மறைத்து அரசியல் விளையாட்டில் இந்த அதிகாரிகளே ஈடுபட்டு முதல்வருக்கு தவறான தகவல்களை கூறி வருகின்றனர்எனவும் கூறப்படுகிறது.. இதனால் ஆட்சிக்கு தான் அவப்பெயர் ஏற்படுகிறது என்பதை முதல்வர் உணர வேண்டும். முதல்வர் சட்டம் ஒழுங்கில் முன்னனுபவம் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும். டம்மி அதிகாரிகளை நியமித்து ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரத்தையும் இந்த அதிகாரிகள் வைத்துக்கொள்ள போடும் திட்டத்திற்கு முதல்வர் உடந்தையாகிவிட கூடாது என்கின்றனர் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் . தேர்தல் நெருங்கும் நேரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றினால் மட்டுமே ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். எனவே முதல்வர் நன்கு ஆலோசித்து டிஜிபி நியமனத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே ஐ.பி.எஸ். அதிகாரிகளின் விருப்பம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும். தேவை இல்லாமல் பொறுப்பு டிஜிபியை நியமித்து ஒரு மாதத்தில் மீண்டும் டிஜிபி நியமிக்க காரணம் இந்த அதிகாரிகளின் சுயநலமே என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

Comments (0)
Add Comment