போலி பாஸ் மூலம் கோடிக்கணக்கில் கனிமவளம் கடத்தல்: கும­ரி பர­ப­ரப்­பு

கனிமவள அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு போலி பாஸ் தயாரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கருங்கற்களை கேரளாவில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற போது போலீசார் மடக்கி 5 டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக குவாரி உரிமையாளர், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 போரையும் போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலத்தில் இயற்கைவளம் பாதிக்காமல் இருக்க மணல், கருங்கற்கள் உள்ளிட்ட கனிமவள பொருட்களை தோண்டி எடுத்து பயன்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் கேரளா மாநில அரசு தடை செய்துள்ளது. தடையை மீறி மணல், கற்களை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் கேரளா மாநிலத்தில் உள்ள ஆறுகள், குவாரிகளில் ஏராளமான கனிமவளங்கள் இருந்தாலும் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஆறுகள், மலைகளை முற்றிலுமாக பெயர்த்தெடுத்து கேரளாவில் நடைபெறும் கட்டுமான திட்டங்களுக்கு அள்ளிச் செல்கின்றனர். இதை தடுக்க வேண்டிய 3 மாவட்ட கனிமவள துறை அதிகாரிகளும், சோதனை சாவடியில் பணியாற்றும் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையின் மாமூல் மழையில் நனைக்கப்படுவதால் எதையுமே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் மழையும், மலை சார்ந்த இடமான நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றங்கரை பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான மணல் பெரிய, பெரிய டாரஸ் லாரிகள் மூலம் கேரளாவிற்கு அள்ளி செல்லப்படுகின்றன. கேரளாவில் தற்போது அதானி குழுமத்தின் சார்பில் விழிஞம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த துறைமுகத்திற்கு தேவையான கருங்கற்கள், மணல் முழுவதுமே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்துதான் அள்ளி செல்லப்படுகின்றன. நெல்லை, கன்னியாகுமரியை சேர்ந்த ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்களும், வாரிசுகளும்தான் விழிஞம் துறைமுகத்தில் கட்டுமான பணிகளை காண்ட்ராக்ட் எடுத்துள்ளனர். இவர்கள் ஆளும் கட்சி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கனிமவள பொருட்களை தினமும் கோடிக்கணக்கில் அள்ளுகின்றனர். ஆளும்கட்சி என்பதால் கனிமவளத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் கைகட்டி, வாய்மூடி மவுனிகளாகிவிட்டனர்.

கனிமவள பொருட்களை கடத்தி செல்வதோடு எந்த வரியும் செலுத்தாமல் கொண்டு செல்லப்படுவதால் அரசுக்கு தினமும் பல கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் பாக்கெட் தினமும் நிரம்புவதால் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. இந்த நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கருங்கற்கள் மற்றும் மணல் ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து சோதனை இட்டத்தின்போது கனிமவள பொருட்களை எடுத்து செல்ல கனிமவள துறையினரை அனுமதி பாஸ் வைத்திருந்தனர். இந்த பாஸ்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கனிமவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தனர். இதில் கனிமவல்துறை உதவி இயக்குனர் கையெழுத்தை போலியாக தயாரித்தும், போலி பாஸ் தயாரித்தும் கனிமவளங்கள் ஒட்டுமொத்தமாக விழிஞம் தனியார் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மணல், கருங்கற்களை ஏற்றிச்சென்ற 5 டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலி பாஸ் தயாரித்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சோனு, பத்தானந்திட்டா பகுதியை சேர்ந்த அருண், கன்னியாகுமரி மாவட்டம் தெல்லாதி பகுதியை சேர்ந்த குவாரி உரிமையாளர் மணிகண்டன், பிணக்குடியை சேர்ந்த முருகன், திருச்சி லால்குடியை சேர்ந்த முத்தமிழ்செல்வன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த டாரஸ் லாரி உரிமையாளர் சிவப்ரியா, ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இவர்கள் கடத்தி வந்த கனிமவள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு போட விடாமல் மேலிடத்தில் இருந்து ஆளுகட்சியின் மாவட்ட பிரமுகர்கள் கடும் முயற்சி எடுத்தனர். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர்.

Comments (0)
Add Comment