சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சி எடுத்த அதி­ரடி முடிவு

தமிழக காவல்துறைக்கு முழு பொறுப்பும், அதிகாரமும் கொண்டவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி தான். இந்த பதவிக்கு தமிழக காவல்துறையில் சீனியர் டிஜிபிக்களாக உள்ள அதிகாரிகளில் இருந்து தகுதியுள்ள டிஜிபியை அரசு நியமிப்பது வழக்கம். தகுதியுள்ள என கூறுவதை விட ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்ட அதிகாரியை இந்த பதவியில் வைத்து அழகு பார்ப்பது வழக்கம்.

கடந்த காலங்களில் எல்லாம் டிஜிபி பதவிக்கு இஷ்டம்போல பட்டியலை அனுப்பி, மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும் பட்டியலில் இருந்து டிஜிபியை மாநில அரசு நியமிப்பது வழக்கம். ஆனால் டிஜிபி பதவி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு மேல் பணியில் இருக்க இருக்க வேண்டும். டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் கண்டிப்பாக 2 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்ற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு தமிழக டிஜிபி நியமனத்தில் முதல்வருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் செய்த தில்லாலங்கடி வேலைகள் ஒட்டு மொத்த காவல்துறையையும் தலைகுனிய வைத்து விட்டது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமிக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பட்டியலை 3 மாதத்திற்கு முன்பு அனுப்புவதற்கு பதிலாக 3 நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

பொறுப்பு டிஜிபியை நியமித்து தங்கள் இஷ்டம் போல காவல்துறையை இயக்க திட்டமிட்டபோது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் மத்திய பணியாளர் தேர்வாணையம் புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பேனல் கமிட்டி கூட்டத்தை கடந்த 26-ம் தேதி கூட்டியது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஏற்கனவே அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்து சீனியர் டிஜிபி மீது புதிய குற்றச்சாட்டை கூறி பட்டியலில் இருந்து நீக்கினார்.

இதற்கு காரணம் தற்போது பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் டிஜிபி நியமன பட்டியலில் 6-வது இடத்தில் இருந்ததால் மத்தியப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யும் 5 பேர் பட்டியலில் இடம்பெற முடியாது. இவரது பெயரை 5 பேர் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே சீனியர் டிஜிபி மீது குற்றச்சாட்டை கூறி நீக்கினார்.

இதன்பிறகு நடந்த கூட்டத்திலும் தலைமை செயலாளர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் தற்போது டிஜிபி பதவிக்கு வாய்ப்புள்ள அதிகாரிகள் என கூறப்படும் சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி அவர்களை முதல் 3 பேர் பட்டியலில் இருந்து நீக்க பல்வேறு குற்றச்சாட்டுகளை தலைமைச் செயலாளர் மூலம் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் மீது ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?

துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? தண்டனை ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கேள்விகளை மத்தியப் பணியாளர் தேர்வாணைய கமிட்டி உறுப்பினர்கள் எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு எந்த ஆதாரத்தையும் தலைமைச் செயலாளரால் கொடுக்க முடியவில்லை. இதனால் திடீரென கொடுக்கும் புகார்கள் அடிப்படையில் பட்டியலில் இருந்து சீனியர் டிஜிபிக்களை நீக்க முடியாது. இந்த விஷயத்தில் கமிட்டி உறுப்பினர்கள் முடிவெடுத்து 3 பேர் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த 3 பேர் பட்டியலில் இருந்துதான் புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கண்டிப்புடன் கூறி விட்டனர். இதனால் பொறுப்பு டிஜிபியை 3 பேர் பட்டியலுக்குள் கொண்டு வர முதல்வர் ஆசிபெற்ற அதிகாரிகளின் முயற்சி கைகூடவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்துவிட்டது.

இந்த பட்டியல் இன்றோ, நாளையோ தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பட்டியலில் இருந்துதான் தமிழகத்தின் புதிய டிஜிபி நியமிக்க படுவார். தற்போது பொறுப்பு டிஜிபியை நியமித்த நிலையில் கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தின்போது டிஜிபி வெங்கட்ராமன் சம்பவ இடத்திற்கு செல்லாமல் கூடுதல் டிஜிபி டேவிட்சனை அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.

நிரந்தர டிஜிபி நியமிக்கப்பட்டிருந்தால் அவர்தான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி பத்திரிகையாளர்களுக்கும் பதில் அளித்திருப்பார். பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு சட்டம் ஒழுங்கு பதவி வகித்து பல ஆண்டுகளாகிறது. உளவுத்துறை பொறுப்பும் இவருக்கு வழங்கப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் டிஜிபியை அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது.

மத்திய பணியாளர் தேர்வாணையப் பட்டியலின்படி சீனியர் பட்டியலில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேர் பட்டியல்தான் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களில் சந்தீப்ராய் ரத்தோருக்குதான் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆனால் இவர் டிஜிபி பதவி ஏற்றாலும் இவருக்கு எதிராகவே முதல்வரின் ஆசிபெற்ற அதிகாரிகள் செயல்படுவதால் இவரால் டிஜிபி பதவியை அமைதியாக வழி நடத்தி செல்வது மிகவும் சிரமம் என்கின்றனர் டிஜிபி அலுவலக அதிகாரிகள். எதற்கெடுத்தாலும் முதல்வரின் பெயரை கூறி மற்ற அதிகாரிகளை செயல்பட விடாமல் தடுக்கும் இந்த அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கு டிஜிபி உள்ளிட்ட எந்த அதிகாரியாலும் இவர்களை மீறி செயல்பட முடியாது என்கிறது காவல்துறை வட்டாரம்.

இதனால்தான் கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் விழுந்துள்ளதாகவும் வேதனை படுகின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். பொதுமக்களின் நலனை விட ஆளும்கட்சி பிரமுகர்களின் விருப்பத்திற்கேற்ப காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டதால் விளைவே இந்த 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்து காவல்துறையினரை தலை குனிய வைத்துள்ளது.

Comments (0)
Add Comment