வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க,விற்கு போட்டி திமுக மட்டுமே என கூறியதுடன் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என நேரடியாகவே விஜய் அறிவித்ததால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லா தொகுதிகளிலும் தான் நிற்பதைப்போல நினைத்து பொதுமக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்ததோடு, முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என கேலியாக அழைத்து சவாலுக்கு இழுத்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட அமைச்சர் தரப்பில் மாநாட்டிற்கு எந்த அளவிற்கு இடையூறு ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இடையூறு கொடுத்து மாநாட்டை எப்படியாவது பிசுபிசுக்க வைத்துவிட வேண்டும் என் பல்வேறு வகையிலும் முயற்சித்தார். மாநாட்டு தேதி முடிவெடுத்த பிறகு விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி முன்கூட்டியே மாநாட்டை நடத்த வைத்தனர். விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையில் மாநாடு வைத்தால் அதிக கூட்டம் கூடிவிடும் என்பதுதான் இதற்கு காரணம். மாநாட்டிற்கு புக்கிங் செய்திருந்த ஒண்டரை லட்சம் சேர்களையும் கடைசி நேரத்தில் கொடுக்க விடாமல் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தனர்.
பகலில் மாநாட்டிற்கு வந்தால் வாகனங்களை தடுத்த நிறுத்த திட்டம் போட்டனர். ஆனால் இரவோடு இரவாக கேரளாவில் இருந்து சேர்களை வரவழைத்ததோடு, அருகில் உள்ள மாவட்ட தொண்டர்களை மாநாட்டிற்கு முதல்நாளே பொதுக்கூட்ட பகுதிக்கு வேனில் வரவழைத்துவிட்டார் விஜய். இதுவரை எம்.ஜி.ஆரை தவிர எந்த தலைவருக்கும் முதல் நாள் இரவில் தொண்டர்கள் மாநாட்டிற்கு வந்து காத்துக்கிடந்ததில்லை என்ற வரலாற்றையும் விஜய் உருவாக்கினார்.
மாநாடு மாலையில்தான் என்றாலும் காலையிலேயே வாகனங்கள் வந்து குவிந்ததால் பார்க்கிங் செய்யும் இடம் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. விக்கிரவாண்டி மாநாட்டில் போதுமான குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுத்தால் தொண்டர்கள் அமரும் இடத்திற்கு அருகிலேயே பைப்புகள் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குடிநீரும்கூட போதுமானதாக இல்லை. காலை முதலே கடும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்ததால் குடிதண்ணீர் போதாமல் தாக்கத்தில் தவிக்க நேரிட்டது. கூட்டத்திற்கு கைக்குழந்தைகள், குழந்தைகளுடன் பெண்கள் குடும்பத்தினருடன் வந்து குவிந்ததால் வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம்போட ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும் விஜய் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அதனை வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு தொண்டர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
சென்னையில் நடந்த ஆர்பாட்டத்திலேயே தொண்டர்கள் தலைவர்களின் பேச்சை கேட்காமல் தடுப்புகளை உடைத்து எறிவது உள்ளிட்ட அராஜகத்தில் ஈடுபட்டதை போலவே மதுரை மாநாட்டிற்கு வேனில் வந்த தொண்டர்கள் வேனின் மேல்பகுதியில் தொங்கிக்கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டது பொதுமக்களை முகம்சுளிக்க வைத்தது. மேடைக்கு வந்த விஜய் மேடையில் இருந்த நிர்வாகிகளுடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேடையில் அமர்ந்திருந்த தனது பெற்றோரும் விஜய்யை கண்டது எழுத்தால் அவர்களின் தோளை பிடித்து அமர வைத்தார். உடனே விஜயின் தயார் ஷோபா சந்தோஷத்தில் விஜய்யை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உடனே தந்தை சந்திரசேகர் மகனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது தொண்டர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் பின்னர் மேடையில் முன்புறம் போடப்பட்டிருந்த ரேம்ப் எனப்படும் நடை மேடையில் நடந்து சென்று தன்னை காண வந்திருந்த தொண்டர்களையும், ரசிகர்களையும் கையசைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு மேடையின் மீது ஏறிவிடக்கூடாது என்பதற்காக ரேம்ப்பின் இருபக்கமும் கிரீஸ் தடவப்பட்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாத சில தொண்டர்கள் மேடை மீது ஏறி விஜயுடன் கைகுலுக்கவும், கட்டிபிடிக்கவும் முயற்சித்தால் பதறிப்போன பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்துவதற்கும் படாதபாடு போட்டுவிட்டனர். தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு தன்மீது வீசிய கட்சி துண்டுகளை கையில் பிடித்து திருப்பி வீசியத்துடன் தனது தலையில் கட்டிக்கொண்டதால் தொண்டர்கள் கூக்குரல் எழுப்பினர்.
கட்சி நிர்வாகிகள் பேசிய பிறகு தனது பேச்சை தொடங்கிய விஜய் தன்னுடைய பேச்சின்போது இந்த மதுரை மண்ணை கால் மிதித்ததுமே என் நினைவில் வந்தது விஜயகாந்தைதான். எம்.ஜி.ஆரைபோல குணம் கொண்டவர் என புகழ்ந்து தள்ளினார். இதன்பிறகு அரசியல் பேச்சை கையில் எடுத்தவர் பிரதமர் மோடியையும், பா.ஜ. கட்சியையும் கடுமையாக தாக்கி பேசினார். தன்னுடைய கொள்கை எதிரி பாஜக . தன்னுடைய கட்சிக்கு எதிரி திமுக என கூறினார். தன்னுடைய பேச்சில் இந்த ஆட்சியில் இதில் ஊழல் இல்லை என்று கூறுங்க அங்கிள் என கிண்டலாக பேச தொடங்கி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் பல்வேறு ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விளாசி தள்ளிவிட்டார். உங்களை அப்பா என அலைகிறார்கள் என கூறிக்கொண்டீர்களே. நான் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் அங்கிள். இதற்கு உங்களிடம் எந்த பதிலும் இருக்காது. நீங்க ரொம்ப தப்பு அங்கிள் என முதல்வரை அங்கிள், அங்கிள் என கூறி தொண்டர்களில் கைதட்டலை அள்ளிவிட்டார் என்றே கூறலாம்.
இந்த இரண்டாவது மாநாட்டில் குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பங்கேற்றதாக உளவுத்துறை மேலிடத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என்கின்றனர் மதுரை மக்கள். தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற மாபெரும் கூட்டத்தை கூட்டுவதில் விஜய் வெற்றிபெற்று இதுவரை ஆட்சி செய்தவர்கள், ஆட்சி செய்துகொண்டிருப்பவர்களுக்கு ஒரு போட்டியை ஏற்படுத்திவிட்டார் என்றே கூறலாம் .
தனக்கு கூடும் கூட்டத்தை கண்டு வெறுமனே மகிழ்ச்சி அடைவதோடு இல்லாமல் அதை ஓட்டாக மாற்றினால் நிச்சயம் விஜய்க்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தனக்கும், திமுகவிற்கு மட்டுமே வரும் தேர்தலில் போட்டி. அதிமுக தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அணைத்து தொகுதிகளிலும் நானே நிற்பதுபோல கருதி ஓட்டுப்போட்டு த.வெ.க வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுதத்தன் மூலம் தனித்து போட்டி என்பதையே சுட்டி காட்டியுள்ளார். இதனால் யார் வெற்றியை இழக்கபோகிறார்கள் என்பதுதான் தற்போதைய பரபரப்பு. காரணம் விஜய் தனித்து போட்டியிட்டால் ஆளும்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிடுவார் என ஆளும்கட்சி நம்புகிறது. மொத்தத்தில் விஜய் மாநாடு ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கு முன்னோடி என்கின்றனர் பொதுமக்கள். பொறுத்திருந்துதான் இதை முடிவெடுக்க முடியும்.