பொதுமக்கள் கண் முன்பாகவே ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீல ஸ்ரீ மதுரை சுவாமி ஜீவ சமாதி மடாலயத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு, திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும் என்கின்றனர் மதுரை சுவாமி சித்தரின் பக்தர்கள்.
சென்னை மாதவரம் நெடுஞ்சாலை பெரம்பூரில் உள்ளது ஸ்ரீல ஸ்ரீ மதுரை சுவாமி ஜீவ சமாதி மடாலயம். இந்த ஜீவ சமாதியில் மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த ஜீவ சமாதிக்கு ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த மடாலயத்தில் சமாதியான ஸ்ரீல ஸ்ரீ மதுரை ஸ்வாமிகள் கடந்த 1901-ம் ஆண்டு ஜீவ சமாதியானதாக கல்வெட்டு உள்ளது. மதுரையை சேர்ந்த மதுரை ஸ்வாமிகள் கடந்த 1900-ம் ஆண்டுக்கு முன்பு மதுரையில் இருந்து பெரம்பூரில் உள்ள இந்த இடத்திற்கு வந்துள்ளார். கோயில் அருகே துணி துவைக்கும் இடமாக இருந்துள்ளது.
துணி துவைக்கும் பகுதிக்கு வந்து மதுரை ஸ்வாமிகள் தங்கி இருந்துள்ளார். இவரை பார்த்து அப்பகுதி மக்களும், துணி துவைப்பவர்களும் பயந்து விரட்டி உள்ளனர். தான் இப்பகுதியில் ஜீவ சமாதியாகவே வந்துள்ளேன். என்னால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. நான் இங்கேயே தங்கி கொள்ள அனுமதிக்க வேண்டும் என மதுரை ஸ்வாமிகள் கேட்டுள்ளார். பொதுமக்களும் சுவாமியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தங்க அனுமதித்தனர். இங்கு தங்கியிருந்தபோது ஏராளமான சித்துவேலைகளை காட்டி அப்பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வந்துள்ளார். 1900-ம் ஆண்டு கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் உணவு பஞ்சத்தை போக்க தனது சித்து வேலைகளால் உணவை வரவழைத்து கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் ஜீவ சமாதி ஆக விரும்புவதாக கூறி ஒரு குழியை அமைத்துள்ளார். அந்த குழியை பெரிய கருங்கற்களால் மூட வேண்டும் என அப்பகுதி மக்களை கேட்டுள்ளார். இதற்கு பொது மக்கள் பயந்துபோனதால் தான் குழிக்குள் சென்று அமர்ந்ததும் கருங்கற்களால் குழியை மூடிவிட வேண்டும். சில மணி நேரத்திற்குள் தான் குழிக்குள் இருந்து வெளியே வந்துவிடுவேன் என கூறியுள்ளார் மதுரை சுவாமி சித்தர். இதன்படி மதுரை சுவாமி குழிக்குள் சென்றதும் கருங்கற்களால் குழியை மூடிவிட்டனர். சில மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் பயந்துபோய் கற்களை அகற்றி பார்த்தபோது குழிக்குள் மதுரை ஸ்வாமிகள் இல்லை. இதன்பிறகே சித்தர் மாயமாய் மறைந்து போனதும், ஜீவ சமாதி அடைந்துவிட்டதும் தெரிந்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இதன் பிறகு ஸ்ரீல ஸ்ரீ மதுரை ஸ்வாமிகளுக்கு ஜீவ சமாதி அமைத்து வழிபட தொடங்கினர்.
இந்த ஜீவ சமாதியை பராமரித்துவரும் அனிதா என்பவர் கூறும்போது, பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் சித்தரின் சமாதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வந்து சித்தரை வழிபாடும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாவிட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும். இதேபோல பல்வேறு தோஷங்களால் திருமணம் தடைபட்டாலும் இங்கு வந்து வெளிப்பட்டதும் திருமணம் கூடிவிடும். ஆண்டுதோறும் மாசிமாசம் அம்மாவாசை நாட்களில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. இவரது சமாதியில் வழிபட்டால் கண்டிப்பாக நல்லதே நடக்கும் . இவர் சிறந்த சிவன் பக்தராவர். இந்த இடத்திற்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றார்…
சித்தர்களில் ஜீவ சமாதி அடைந்தவர்கள் ஒரு சிலரே. அதில் ஸ்ரீல ஸ்ரீ மதுரை ஸ்வாமிகளும் ஒருவர். இவரை போன்ற சித்தர்களின் அருமை பலருக்கும் தெரியாமல் உள்ளது. பல்வேறு சித்து வேலைகளை செய்த இவரது சக்தி அளப்பரியது என்கின்றனர் இந்த மடாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள்.