ED கையில் சிக்கிய பல்லாயிரம் கோடி ஆவணங்கள்: டில்லியின் கிடுக்குப்பிடியில் சசியின் பினாமிகள்
சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பண மதிப்பிழப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அமலாக்கத்துறை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் அதிரடியாக 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. அதிமுகவில் சசிகலா தரப்பு செங்கோட்டையன் உள்ளிட்டோர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நிலையில் பாஜக அமலாக்கத்துறை மூலம் சசிகலாவுக்கு வைத்திருக்கும் செக் என அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரும், தொழில் அதிபருமான ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி ஆகியோருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை 2 நாட்களுக்கு முன்பு சோதனையில் இறங்கியது.
இரண்டாவது நாளாக நடக்கும் இந்த அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பணமதிப்பிழப்பின்போது நோட்டுக்களை மாற்றிய விவகாரம் என்றாலும் இதன் பின்னணியில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் மீதான அதிரடி சோதனை என்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி. தொழில் அதிபரான இவர் மார்க் என்ற பிரபலமான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில் 2017ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது பல நூறு கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் மார்க் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக தொழில் அதிபர் ராமகிருஷ்ணா ரெட்டிக்கு சொந்தமான சைதாப்பேட்டையில் உள்ள வீடு, திருவான்மியூரில் உள்ள கட்டுமான அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த மார்க் ஸ்வர்ணபூமி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தொழில் அதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் பினாமியாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது சசிகலா தரப்பு கொடுத்த 2 ஆயிரம் ருபாய் நோட்டுக்களுக்கு பதிலாக கட்டுமான நிறுவனத்தின் மூலம் 500 ரூபாய் நோட்டுகளாக பல ஆயிரம் கோடியை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறை சோதனையில் கிடைத்துள்ளது. இந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதேபோல சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தங்கநகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி என்பவருக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள வீடும், நகைக்கடைகளில் அமலாக்க துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இவரும் பணமதிப்பிழப்பின் போது சசிகலா தரப்பில் கொடுத்த பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுகளை பதிலாக தங்க கட்டிகளாக கொடுத்ததாக புகார் உள்ளது.
இது தொடர்பான ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஏற்கனவே காஞ்சிபுரம் பத்மாவதி சுகர்ஸ் லிட் நிறுவனத்தின் இயக்குனர்கள் பெங்களூருவில் உள்ள இந்தியன் வங்கியிடம் 120 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. வருமான வரித்துறை சசிகலா தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சிபிஐ பத்மாவதி சுகர்ஸ் நிறுவன இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.
காஞ்சிபுரம் பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தை நிர்வாக இயக்குனர் சிவ்கான் படேல், மகன்களான ஹிதேஷ் சிவ்கான் படேல், தினேஷ் படேல் ஆகியோரும் இணைத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் பத்மாவதி நிறுவனத்தை சசிகலாவிடம் 450 கோடிக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் போட்டனர். இதற்காக பழைய 2 ஆயிரம் ருபாய் நோட்டுகளாக 450 கோடிக்கு வாங்கி கைமாற்றிவிட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் ஹிதேஷ் சிவ்கான் படேல், தினேஷ் சிவ்கான் படேல், தம்புராஜ், ராஜேந்திரன், பாண்டியராஜ், தலைமை நிதி அதிகாரி வேங்கட பெருமாள் முரளி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பெங்களூரு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து மோசடியான ஆவணங்கள் மூலம் 150 கோடி கடன் பெற்று முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம் பல நூறு கோடி ருபாய் அளவிற்கு 2 ஆயிரம் ருபாய் நோட்டுகளாக செலுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவருமே சசிகலாவின் பினாமிகளாக செயல்பட்டதும், பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் மூலம் பணமதிப்பிழப்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பழைய 2 ஆயிரம் ருபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே மார்க் கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர் வீடுகளில் அமலாக்கத்துறை தனது அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.
சமீபகாலமாக அதிமுகவில் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதோடு டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறி பாஜ கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதிமுகவுடன் பாஜ கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் இந்த கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் ஓ. பன்னீர் செல்வமும் இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருமே சசிகலாவின் திட்டத்தின்படியே செயல்படுவதாக பாஜ மேலிடத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அல்லது எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்க சீனியர் தலைவர்கள் மூலம் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டம் என்பதையும் பாஜ மேலிடம் அறிந்துள்ளது. எனவேதான் சசிகலாவிற்கு செக் வைக்கும் வகையில் அவரது பண மதிப்பிழப்பு மோசடி வழக்கு மற்றும் பினாமிகள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் சசிகலா மீண்டும் கைதாகும் சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம். எனவே சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பாஜ மேலிடத்தில் கேட்டுக்கொண்டதால் பேரிலேயே இந்த சோதனைகள் நடத்தப்படுவதாகவும் இதன்மூலம் சசிகலா தரப்பை அடக்கி வைக்க பாஜ தீவிரம் காட்டுவதாகவும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவில் சிக்கலை ஏற்படுத்த சசிகலா தீவிரம் காட்டுவதால் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அவருக்கு செக் வைக்க எடப்பாடி தீவிரம் காட்டி வருகிறார். இதேபோல ஆளும் கட்சியான திமுக மீதும் விரைவில் அமலாக்க துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க போகிறது எனவும் அதிமுக வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்காகவே மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து எடப்பாடி திரும்பியுள்ளார். இன்னும் பல அதிரடி சோதனைகள் தமிழகத்தில் இருக்கும் என்கிறது பாஜக வட்டாரங்களும்.