காஞ்சி.. டிஎஸ்பி கைது வழக்கில் திடீர் திருப்பம் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்த சென்னை ஐகோர்ட்

24

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி.யை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்த நீதிபதி செம்மலை இடமாற்றம் செய்வதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்க செய்துள்ள அறிக்கை அடிப்படையில் நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவர் பூசிவாக்கம் கிராமத்தில் டீ கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஜூலை மாதம் வந்த அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் வாங்கி தின்ற கேக் நன்றாக இல்லை என குற்றம்சாட்டினார். இதனால் கடை உரிமையாளர் சிவகுமாருக்கு, முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் அடித்துக் கொண்டனர். தன்னை முருகன் அடித்து விட்டதாக தனது மருமகனான போலீஸ்கார் லோகேஸ்வரனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் உடனே முருகனின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு, முருகனின் மனைவி பார்வதியை ஜாதிப்பெயரை கூறி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

தன்னை ஜாதிப்பெயரை கூறி போலீஸ்காரர் லோகேஸ்வரனும், அவரது உறவினர்களும் திட்டியதாகவும், தாக்க முயற்சித்ததாகவும் பார்வதி வாலாஜாபாத் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸ்காரர் லோகேஸ்வரன், மாமனார் சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இது குறித்து பார்வதி முதல்வர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் புகார் அளித்தார். இந்த வழக்கு பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மலுக்கு தெரிய வந்து தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் வாலாஜாபாத் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி லோகேஸ்வரின் மற்றும் அவரது குடும்பத்தினரையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் படியும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி சங்கர் கணேஷிற்கு உத்தரவிட்ட பிறகும் கைது செய்யாமல் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்ததால் அவரையே கைது செய்ய உத்தரவிட்டார்.

போலீசார் கைது செய்ய முன்வராத நிலையில் நீதிமன்ற ஊழியர்கள் மூலம் கைது செய்து காஞ்சிபுரம் கிளை சிறையில் தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்று அடைக்கவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சண்முகம் முறையாக விசாரிக்க வில்லை. இவர் தனது கடமையை கண்டு கொள்ளவில்லை. இவரது நடவடிக்கை கண்டிக்கக் கூடியது எனவும் கண்டனம் தெரிவித்து உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற ஊழியர்கள் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்து கிளை சிறையில் ஒப்படைத்தனர். உடனே டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக சென்ற குரூப் 1 டி.எஸ்.பி.யை மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழக காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக நீதித்துறைக்கே எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். மாவட்ட நீதிபதி செம்மல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து போலீஸ்காரர் லோகேஸ்வரன், காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம், டி.எஸ்.பி. சங்கர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் வந்த இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தேவையற்றது. அரசு ஊழியருக்கு எதிராக வன் கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும் போது நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும். எனவேடி.எஸ்.பி.யை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, போலீஸ்காரர் லோகேஸ்வரனை வெளியேற்ற பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல், மாவட்ட எஸ்.பி. ஷண்முகம் இடையிலான வாட்ஸ் அப் உரையாடல்கள், எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வற்புறுத்தியது, லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சம்பவம், டி.எஸ்.பி.க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கு 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தீர்ப்பு வழங்கினார். இதன்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜிலென்ஸ் பதிவாளர் கொடுத்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதி சதீஷ்குமார், மாவட்ட நீதிபதிக்கு எதிராக போலீசாரால் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை பதிவாளர் கொடுத்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

எனவே விஜிலென்ஸ் பதிவாளர் அறிக்கையை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளை கொண்ட விஜிலென்ஸ் குழுவின் நடவடிக்கைக்கு பதிவாளர் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி தொடர்ந்து அதே மாவட்டத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது. எனவே அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கையை பணியிட மாற்ற குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். தனிப்பட்ட விரோதத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவால் மாவட்ட நீதிபதி செம்மல் இடமாற்றம் செய்யப்படுவார் என தெரிகிறது. அதே நேரத்தில் இதுபோன்ற வழக்குகளில் மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கையை உடனுக்குடன் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்கின்றனரா? என்பதையும் மாவட்ட கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும். பொதுவாகவே காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்படும் புகார் மனுக்களாக இருந்தாலும், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த சப் -டிவிஷன் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீதும் உடனே எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைத்தால் எந்த புகாராக இருந்தாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. மாவட்ட முக்கிய பிரமுகரின் பெயரை கூறி கட்சி நிர்வாகிகள் காவல்துறை நடவடிக்கைகளில் தலையிட்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்க விடாமல் தடுத்துவிடுகின்றனர் என்ற குற்றசாட்டுகள் உள்ளன. இந்த குற்றசாட்டுகளை சரக டிஐஜி, மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தேவை இல்லாத சட்டம் ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது என காவல்துறையினரே குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்களா?