கரூர் உயிர் பலி சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய திட்டமிடுவதோடு, கூட்டணி கட்சிகள் நெருக்கடி காரணமாக விஜய் மீது வழக்குப் போட காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் மேலிட நெருக்கடியால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள நடிகர் விஜய்க்கு வழங்கவேண்டிய போலீஸ் பாதுகாப்பை தராததால்தான் இந்த விபத்து சம்பவத்திற்கு காரணம் என விஜய் தரப்பு உள்துறையிடம் புகார் அளித்து தமிழக காவல்துறைக்கு கடும் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை கமேண்டோ பிரிவு போலீசாரிடம் விசாரணை நடத்தியுள்ளதால் தமிழக காவல்துறை அதிகாரிகளும், உள்துறை அதிகாரிகளும் கடும் பீதியில் உள்ளனர்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் விலை மதிப்புமிக்க 41 உயிர்கள் அநியாயமாக பறிபோனது. இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்கு நடிகர் விஜய் உரிய நேரத்தில் பேச வராதது எனவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் எடுக்கவில்லை.
உயிர்பலி நடந்த பிறகு பலியானவர்களை சந்திக்காமல் விஜய்யும், கட்சி முக்கிய நிர்வாகிகளும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டனர் என காவல்துறையினரும், அரசு நிர்வாகமும், ஆளும் திமுகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவம் நடக்க என்ன காரணம் என சம்பவ இடத்தில் இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாமக்கல்லில் காலை 10 மணிக்கே நடிகர் விஜய் பேசுவதாகவும், கரூரில் நண்பகல் 12 மணிக்கு பேசுவார் எனவும் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதே நேரம் நாமக்கல்லில் பொதுமக்கள் அதிகம் திரண்டாலும் பேசுவதற்கு பல இடங்கள் இருந்தபோதும் மிகவும் குறுகலாகவும், நெருக்கடியான இடமாகவும் உள்ள நாமக்கல், சேலம் ரோடு சந்திப்பில் பேச அனுமதி வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு வரவேண்டிய விஜய் மதியம் 2 மணிக்குத்தான் வந்தார். இவரை காண சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள், இளைஞர்கள் திரண்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக மதியம் பலரும் மயக்கமடைய நேரிட்டது. இதை கட்சி நிர்வாகிகளோ, காவல்துறையினரே கண்டுகொள்ளவில்லை. விஜய் பேசும் இடத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.
இதேபோல கரூரில் விஜய் பேசும் இடமானது நல்ல அகலமான இடமாக இருந்தாலும் சாலையின் இருபுறங்களும் வீடுகளும், கடைகளும் நிறைத்த நெருக்கடி மிகுந்த இடமாகும். மதியமே விஜய் வருவார் என கூறப்பட்டதால் கைகுழந்தைகளுடன் பெண்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் விஜய் சம்பவ இடத்திற்கு இரவு 7 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். விஜய்யை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் வந்த பெண்களுக்கு போதுமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை. விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்போது அவரை சுற்றி குறைந்தபட்சம் 20 போலீசார் சுற்றிநின்று பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக வி.ஐ.பி.க்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அனுமதி வழங்கப்படும் இடத்தில் எத்தனை பேர் நிற்க முடியும்? எத்தனைபேர் இருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு எந்த அசம்பாவித சம்பவம் நடக்காது என்பதை போலீசாரும், உளவுத்துறையினரும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக அறிக்கை அளிக்க வேண்டும்.
உதாரணமாக 10 ஆயிரம்பேர் கலந்துகொள்ளலாம் என்கிறபோது 7 ஆயிரம் பேர் வந்ததுமே அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு வழங்கி கூட்ட நெரிசல் ஏற்படாமலும், இதற்கு மேல் கட்சி தொண்டர்கள உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்வார். மேலும் வி.ஐ.பி.யை தொண்டர்கள் நெருங்கி எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காக ரோப் எனப்படும் கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவது வழக்கம்.
வி.ஐ.பி. பேசும் இடத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகளை போட்டு சாலையை அடைத்து வைத்து கூட்ட நெரிசல் ஏற்படாமலும், தொண்டர்கள் உள்ளே அதிகமாக கூடாமல் பார்த்துக்கொள்வதும் போலீசாரின் வழக்கம். கூட்டத்திற்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து வேனை சுற்றி நின்று பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முந்தித்தள்ளிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விஜய்யை பார்க்க பல ஆயிரம் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் குவிந்திருந்த நிலையில் வேனுடன் வந்த மேலும் பல ஆயிரம் தொண்டர்களும் உள்ளே நுழைந்ததால்தான் கூட்ட நெரிசல் அதிகரித்தது. கிட்டத்தட்ட போலீசார் கணக்குப்படி 25 ஆயிரம் பேர் கூடியதாக வைத்துக்கொண்டாலும் சம்பவ இடத்தில் 300 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததாக டிஜிபி, சட்டம் ஒழுங்கு டிஜிபி, வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோர் கூறியிருந்தாலும் வெறும் 65 போலீசார் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்ததும் சரகத்திற்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி சம்பந்தப்பட்ட மாவட்ட உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது கூடுதல் பாதுகாப்பு போட வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக பதில் கிடைத்ததாம். இதனால் சரக அதிகாரி எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். சம்பவ இடத்தில் எந்த உயர் அதிகாரிகளும் பாதுகாப்பை கவனிக்காததோடு, சம்பந்தப்பட்ட்ட டிவிசன் அதிகாரி உள்ளிட்டவர்கள் கூட அருகில் நிற்காமல் ஒதுங்கி இருந்துவிட்டனராம்.
எதிர்கட்சியினருக்கு அதிக கூட்டம் கூடுவதை ஆளும்கட்சி ரசிக்காவிட்டாலும் கூடியிருக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையினரின் முக்கிய கடமை. ஆட்சியாளர்களும், ஆட்சிகளும் மாறலாம். ஆனால் காவல்துறையினர் தங்கள் பணிக்காலம் வரை எந்த ஆட்சியாக இருந்தாலும் பணியாற்றிய தீரவேண்டும். மனசாட்சி உள்ள எந்த காவல்துறையினரும் தங்கள் கண் முன்பாக எந்த உயிரும் பறிபோவதை அனுமதிப்பதில்லை. எவ்வளவோ விபத்துகளில் கூட காவல்துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றிய சம்பவங்கள் பல நடந்ததுண்டு. ஆனால் அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருக்கும் நிலையில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மக்களின் பாதுகாப்பே மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
தற்போதைய சம்பவத்தில் 41 உயிர்கள் பலியாக விஜய் நிர்வாகிகளுக்கும் பொறுப்பு உண்டு. அதே நேரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கண்டிப்பாக இந்த உயிர்பலியை தடுத்திருக்க முடியும். ஆட்சியாளர்கள் உத்தரவால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை வழங்காததால் விலை மதிப்பில்லாத 41 அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. இது கண்டிப்பாக காவல்துறையினரின் மனசாட்சியை காலம் முழுவதும் அரித்துக்கொண்டே இருக்கும்.
இனி வரும்காலங்களிலாவது பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்பதை காவல்துறை உணர வேண்டும். காவல் துறையினர் விஜய் கட்சி நிர்வாகிகளை கைது செய்து வருவதோடு கூட்டணி காட்சிகள் நெருக்கடியால் விஜய் மீது வழக்கு தொடரவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் வேண்டுமென்றே காவல்துறை தவிர்த்துவிட்டதாக கூறி மத்திய உள்துறைக்கு உரிய ஆதாரங்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று சமர்பித்துள்ளாராம்.
இந்த ஆதாரங்களுடன் மத்திய உளவுத்துறையும் இந்த விபத்து குறித்து உள்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதோடு ஆளும்கட்சி உத்தரவால் உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அறிக்கை அனுப்ப உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் போதுமான பாதுகாப்பு கொடுத்ததாக கூறிவரும் உயர் அதிகாரிகளும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் கடும் பீதியில் உள்ளனர்.
இதோடு வரும்காலத்தில் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதாம். விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய கமெண்டோ பிரிவினரிடமும் உள்துறை அறிக்கை பெற்றுள்ளது. கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளதாம்.