– சிவ. செல்லையா –
நடிகை நயன்தாரா தயாரித்து வெளியிட்ட ஆவண படத்தில் சந்திரமுகி திரைப்படத்தில் இருந்து தங்கள் அனுமதி இல்லாமல் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், பயன்படுத்திய காட்சிகளை நீக்க கோரியும் இந்த படத்தின் காப்புரிமை பெற்றுள்ள எ.பி. இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதால் மீண்டும் ஆவண பட சர்ச்சை திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரைப்படத்தில், கதாநாயகனுக்கு இணையாக நடிக்க தன்னை நடிப்பில் மெருகேற்றி வளர்த்து லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததோடு செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளையும் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
ஒவ்வொரு படத்திற்கும் பல கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா தன்னுடைய திருமண விழாவையும் தனியார் நிறுவனத்திற்கு விற்று பல நூறு கோடியை சம்பாதித்ததாக திரைப்பட துறையினரே மூக்கில் விரல் வைக்கச் செய்தவர். இதன் பின்னர் தங்கள் திருமண ஆவண படத்தை நெட் பிலிக்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிக்கு விற்பனை செய்தார். இந்த ஆவணப் படத்தில் சிலருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் தான் நடித்த திரைப்படங்களில் படத்தில் வெளியாகாத காட்சிகளை பயன்படுத்தி இருந்தார்.
குறிப்பாக தனுஷ் தயாரிப்பில் வெளியாகி நயன்தாரா நடித்திருந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வெளிவராத பல காட்சிகளை இந்த ஆவண படத்தில் நயன்தாரா பயன்படுத்தி இருந்தார். தங்கள் அனுமதி இல்லாமல் இந்த காட்சிகளை பயன்படுத்தியது தவறு எனவும், இதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ருபாய் தர வேண்டும் என தனுஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தங்கள் முன்னேற்றத்தில் தனுஷிற்கு ஏற்பட்ட எரிச்சலால் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை மேலும் பெரிதாக்கினார். இந்த நிலையில் ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளையும் பயன்படுத்தியிருந்த நிலையில் இந்த படத்தின் காப்புரிமை பெற்றுள்ள ஏ.பி. இன்டெர் நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
தாங்கள் காப்புரிமை பெற்றுள்ள சந்திரமுகி திரைப்படத்தில் இருந்து தங்கள் அனுமதி இல்லாமல் சில காட்சிகளை நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தி உள்ளார். இது சட்டப்படி தவறு. எனவே ஆவணப் படத்தில் இந்த காட்சிகளை இனியும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த காட்சிகளை நீக்க வேண்டும். இந்த ஆவண படத்தின் மூலம் பெற்றுள்ள லாபக் கணக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும்கட்சி பிரமுகருடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி இந்த ஆவணத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் செய்து விடலாம் என கருதிய நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இந்த வழக்கினால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவணப் படம் மேலும், மேலும் சர்ச்சையில் சிக்குவது திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் திரைப்படங்களுக்கும் எதாவது சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே நயன்தாரா நடித்து வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் நயன்தாரா தரப்புக்கும் இந்த வழக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வழக்கால் தனுஷ் தரப்பு மட்டும் மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர் திரைப்படத் துறையினர்.