டிஜிபி பதவியை முடக்க விடா முயற்­சியில் அதி­கா­ரி­கள்: கொந்­த­ளிக்­கும் ஐ.பி.எஸ்.கள்

13

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால் நீதிமன்றத்தையும் நாடவேண்டும் என முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் திட்டமிடுவதால் தமிழக டிஜிபி நியமனத்திற்கு இப்போதைக்கு எந்த முடிவும் வரப்போவதில்லை. காவல்துறையில் மிக உயர்ந்த பதவியான டிஜிபி நியமனத்தில்கூட இந்த அதிகாரிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பது காவல்துறைக்கு நல்லதல்ல. இதனால் நிர்வாகம் சீரழிந்து போய் விடும் என வேதனையுடன் கூறுகின்றனர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற பிறகு நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த ஜூனியர் டிஜிபி வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் முதல்வருக்கு நெருக்கமான ஐ.எஸ்.எஸ். அதிகாரியுடன் நெருக்கம் காட்டிவரும் சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கைவரிசையே காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பணி நீட்டிப்பு வழங்க முயற்சித்தது முதல் பொறுப்பு டிஜிபியை நியமித்தது வரை இந்த ஒருசில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கைங்கர்யமே காரணம் என தெரியவந்தது. இவர்கள் காவல்துறையின் ஒட்டுமொத்த அதிகாரமும் தங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு திட்டமிட்டு முதல்வருக்கு நெருக்கமான ஐ.எஸ்.எஸ். அதிகாரி மூலம் முதல்வருக்கு தவறான தகவல்களை கொடுத்து பொறுப்பு டிஜிபி நியமனம் செய்ய வைத்தனர்.

எதிர்பாராதவிதமாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதியன்று பேனல் கூட்டத்தை கூட்டியபோதும் சீனியர் டிஜிபிக்கள் மீது தமிழக அரசே பல்வேறு குற்றசாட்டுகளை கூறி அவர்களை இந்த பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு டிஜிபி சீனியர் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள வெங்கட்ராமன், 7-வது இடத்தில் உள்ள வினித் தேவ் வான்கடே, 8-வது இடத்தில் உள்ள சஞ்சய் மாத்தோர் உள்ளிட்ட 3 பேர் பட்டியலையே மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்துடுக்க வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் மூலம் நெருக்கடி கொடுத்தனர். ஆனால் சீனியர் அதிகாரிகள் மீது கடைசி நேரத்தில் குற்றசாட்டுகளை எந்த ஆதரமோ, தண்டனையோ வழங்கப்படாத சூழ்நிலையில் ஜூனியர் டிஜிபியை நியமிக்கும்படி கூறுவது சரியான நடைமுறை கிடையாது என மத்திய பணியாளர் ஆணைய செயலாளர் கூறிவிட்டார். இதன்பிறகு சீனியர் பட்டியலில் உள்ள சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ் குமார் ஆகியோரின் பெயர்கள் கொண்ட 3 பேர் பட்டியலை தேர்வு செய்து மத்திய பணியாளர் தேர்வாணையம் கடந்த புதன்கிழமையன்று தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

வழக்கமாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அனுப்பும் பட்டியலில் இருந்து தங்களுக்கு வேண்டப்பட்ட டிஜிபி பெயரை தேர்வு செய்து முதல்வருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பதவியில் நியமிப்பது வழக்கம். ஆனால் 3 பேருமே தங்களுக்கு வேண்டப்படாதவர்கள் என்பதால் முதல்வரின் உள்வட்டத்தில் உள்ள இந்த ஐ.எஸ்.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் புதிய டிஜிபி பெயரை தேர்வு செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் நிறுத்தி வைத்துவிட்டனர். இந்த பட்டியலில் உள்ளவர்களை டிஜிபிக்களாக நியமிக்க முடியாது. 3 பேர் மீதும் குற்றசாட்டுகள் உள்ளன. எனவே தாங்கள் ஏற்கனவே கூறியபடி ஜூனியர் அதிகாரிகளான வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைக்க வேண்டும் என கடிதம் எழுத திட்டமிட்டுள்ளாராம். ஒருவேளை மத்திய பணியாளர் தேர்வாணையம் மறுத்தால் உச்ச நீதிமன்றத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் இந்த அதிகாரிகள் கைநகர்த்தி வருகின்றனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிராக வழக்கு தொடரும் பட்சத்தில் தமிழக அரசை எதிர்த்து பாதிக்கப்படும் 3 சீனியர் டி.ஜி.பி.களும் வழக்கு தொடரும் சூழ்நிலை ஏற்படும். இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்தும் இவர்களை நியமிக்க விடமாட்டோம் என பிடிவாதமாக நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனராம் இந்த குறிப்பிட்ட அதிகாரிகள். இவர்களது சுயநலம் காரணமாக கரூர் உயிர்பலி சம்பவத்தை சரியாக காவல்துறை கையாளவில்லை என்ற அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்துவிட்டனர். இந்த பட்டியலில் உள்ளவர்களை தேர்வு செய்யாமல் ஜீனியர் அதிகாரியை தேர்வு செய்யும்பட்சத்தில் ஒட்டுமொத்த சீனியர் டிஜிபிக்களும் இவர்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்புள்ளது. வரும்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இதையே முன் உதாரணமாக கொண்டு ஜூனியர் டிஜிபிக்களை நியமிக்கும் சூழ்நிலையை ஏற்படும். எனவே ஜூனியர் டிஜிபி நியமனத்தை தடுக்க வேண்டும் என சீனியர் டிஜிபிக்கள் மட்டுமின்றி, சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் காய் நகர்த்த தொடங்கிவிட்டனர்.

தமிழக காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான டிஜிபி நியமனதில்கூட தங்கள் சுயநலத்திற்காக வேண்டப்பட்ட அதிகாரியை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக செயல்படும் இந்த செயல் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என இந்த அதிகாரிகள் செயல்படுவதை விட்டுவிட்டு காவல்துறை நடைமுறையை மாற்றி சட்டம் ஒழுங்கை சீரழிக்க முயல்கின்றனர்.

இவர்களைப்பற்றி முதல்வரிடம் கூறவேண்டிய முக்கிய அதிகாரிகளே இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் தமிழக காவல்துறை இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. இதனால் காவல்துறையின் நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய்விடும் அபாயம் உள்ளது. பொறுப்பு டிஜிபியை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். எனவே ஒருசிலரின் சுயநலத்திற்காக காவல்துறையை அடகு வைக்காமல் மக்களின் நலனே மிக முக்கியம் என்பதை ஆட்சியாளர்கள் உணருவார்களா?