ராகிங் என்ற பெயரில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை அடித்து தாக்கி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்ததுடன் விடுதி காப்பாளர் பாலசுப்ரமணியத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது வழக்கம். இந்த ராகிங் முறை சீனியர் மாணவர்களுடன், ஜூனியர் மாணவர்கள் நட்புடன் பழக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஜூனியர் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் மிகவும் தரக்குறைவாக நடத்துவது, தாக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டதால் ராகிங் செய்ய தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இதன் பிறகும் கூட கல்லூரிகளும், குறிப்பாக விடுதிகளில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்வது தொடர் கதையாகவே உள்ளது. இதன் உச்சக் கட்டமாக ஜூனியர் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் அடித்து, உதைத்து தாக்கியதோடு உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அதை வீடியோ படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கொடூர சம்பவம் உசிலம்பட்டியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் நடந்தேறி உள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன், செக்காணூரணி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் தங்கி அரசு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவனை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேர் தங்கள் அறைக்கு வரும்படி கூறி மிரட்டி உள்ளனர்.
சீனியர் அழைத்ததால் வேறுவழியின்றி அறைக்கு சென்றதும் மாணவனின் உடைகளை கழட்டும்படி கூறியுள்ளனர். மாணவன் மறுக்கவே அவனை சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்துபோன மாணவன் தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளான். அவனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்த சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர்.
இந்த நிலையில் மாணவனின் நிர்வாண வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவன் பெற்றோரிடம் கூறியுள்ளான். மாணவனின் தந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முதலில் பாதிக்கப்பட்ட மாணவன் பட்டியலின மாணவன் என கூறப்பட்டது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவன் பட்டியலின மாணவன் அல்ல, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவன்தான் என தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் 2-ம் ஆண்டு படித்து வரும் 3 மாணவர்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 3 சிறுவர்களும் தொழிற்பயிற்சி பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற விடுதியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜவகர் விசாரணை நடத்தியிருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 சிறுவர்கள் மீதும் ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தடுக்காததால் விடுதியின் காப்பாளர் பாலசுப்பிரமணியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.