தமிழகத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஏற்பட்டு குளறுபடி காரணமாக நிரந்தர டிஜிபியை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோடு முதல்வரை அவசரரமாக சந்தித்திருப்பதன் மூலம் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. இவர் புதிய டிஜிபியாக பதவி ஏற்கும் நேரத்தில் மாநகர ஆணையர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கூண்டோடு மாற்றப்படவிருப்பதால் காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற நிலையில் புதிய டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் முதல்வரின் ஆதரவு உள்வட்டத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பின்னணி இருப்பது அறிந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி டிஜிபி சீனியரிட்டி பட்டியலில் முதல் இடத்தில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால், இரண்டாம் இடத்தில் ஆவின் விஜிலென்ஸ் இயக்குனர் ராஜீவ் குமாரும், 3-ம் இடத்தில் போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோரும் உள்ளனர். இவர்கள் 3 பேரையும் விட்டுவிட்டு 6-ம் இடத்தில் உள்ள தற்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை நிரந்தரமாக்க இந்த உள்வட்ட அதிகாரிகள் திட்டமிட்டு காய் நகர்த்தி வந்ததோடு, சீனியாரிட்டியில் இருக்கும் 3 அதிகாரிகள் மீதும் குற்றசாட்டுகள் இருப்பதாக புதிய பைலை உருவாக்கி மத்திய பணியாளர் தேர்வாணைய கூட்டத்தில் அவசரமாக ஒப்படைத்தனர்.
ஏற்கனவே சீனியாரிட்டி பட்டியலை ஒப்படைத்துவிட்டு சில நாட்களில் நடந்த மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த கூட்டத்தில் புதிதாக 3 சீனியர் டிஜிபிக்கள் மீது குற்றசாட்டுகளை கூறுவதை ஏற்க முடியாது என பணியாளர் தேர்வாணைய தலைவர் உறுதியாக கூறிவிட்டதோடு கடந்த 11 நாட்களுக்கு முன்பே சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கொண்ட 3 பேர் பட்டியலையும் அனுப்பி வைத்துவிட்டார்.
இந்த பட்டியல் வந்த பிறகும் நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் இந்த பட்டியலை தாமதப்படுத்தவும், பட்டியலில் திருத்தும் செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதவும் இந்த உள்வட்ட அதிகாரிகள் திட்டம் போட்டு வந்தனர். இதனால் பட்டியல் வந்து 10 நாட்களுக்கு மேலாகியும் டிஜிபி பைலை நகர்த்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் பட்டியலை மாற்றி அமைக்க
ஒத்துக்கொள்ளா விட்டால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடர்ந்து பொறுப்பு டிஜிபியை நிரந்தர டிஜிபியாக்கி விடுவது என்ற முடிவோடு இந்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் தமிழக அரசுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட படு பின்னடைவு தமிழக ஆளும்கட்சி வட்டாரத்திலும், அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழைகளிடம் இருந்து கிட்னி திருடிய வழக்கில் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான 2 மருத்துவமனைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்கா தலைமையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இதேபோல சென்னை வியாசர்பாடியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் அதிரடியால் தள்ளுபடி செய்தது. இதோடு கரூரில் விஜய் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்க கூடாது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என பாஜக, தா.வெ.க மற்றும் தனி நபர் தொடர்ந்த வழக்கில் பல்வேறு அதிரடி கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது கேட்டு தமிழக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டனர்.
மதுரை உயர் நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் எவ்வாறு விசாரணைக்கு எடுத்தது? பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான வழக்கில் கரூர் வழக்கை சம்பந்தப்படுத்தி உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கள் எப்படி பொறுந்தும்? சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியதோடு, சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு வழக்கு விசாரணையில் தலையிட்டது? இதற்கு யார் அனுமதி கொடுத்தது என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி கேள்விகளை கேட்டதுடன், இந்த வழக்கில் தமிழக அரசு பிராமண பாத்திரம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதோடு மதுரை திருப்பரங்குன்றத்தில் சாமி கும்பிடுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும் தமிழக அரசுக்கு எதிராக அமைந்துவிட்டது. ஒரே நாளில் மதுரை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வழக்குகள் ஆளும்கட்சிக்கும், முதல்வருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்குகளில் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூர் வழக்கை அதிகாரிகள் கையாண்ட விதம்தான் காரணம் என மேலிடத்திற்கு அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்கள் தரப்பில் எடுத்து கூறப்பட்டதாம். இதை கேட்ட முதல்வரும், துணை முதல்வரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். முக்கிய வழக்குகளில் காவல்துறை அதிகாரிகளும், ஐ.ஏ .எஸ். அதிகாரிகளும் தவறான தகவலை கூறி அரசுக்கும், ஆட்சிக்கும் அவப்பெயரை உருவாக்கிவிட்டனர்.
எனவே முதலில் காவல்துறையின் பிரச்சினையை தீர்க்க நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என முதல்வருக்கு தெரிவிக்கப்பட்ட முக்கிய ஆலோசனை அடிப்படையில் ஓசூரில் நடந்த அரசு நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோரை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து அரை மணி நேர ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் எதிரொலியாக நேற்று இரவு 8 மணிக்கு நிரந்தர டிஜிபி நியமனம் தொடர்பான பைலை டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறை அதிகாரிகள் பெற்று தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை அடிப்படையில் சந்தீப் ராய் ரத்தோர் நிரந்தர டிஜிபியாக நியமிப்பதற்கான பைலை தயாரானது. இந்த தகவல் காட்டுதீயாய் பரவிய நிலையில் இரவே புதிய டிஜிபியாக ரத்தோர் நியமிக்கப்படும் ஆணை வெளியாகும் என கூறப்பட்டது. இதற்கு ஏற்றார் போல தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார் மற்றும் உள்துறை அதிகாரிகள் இரவு 10.30 மணிவரை அலுவலகத்தில் இருந்தனர். ஆனால் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
இதுபற்றி தலைமை செயலாளர் வட்டாரத்தில் விசாரித்தபோது முதலில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பான உத்தரவை மட்டும் பிறப்பிக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதன் பிறகு கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் சில அதிகாரிகளையும் மாற்றவேண்டும் என முதல்வர் கருதியதால் இந்த பட்டியலுடன் முதல்வரை சந்திக்க வரும்படி தலைமை செயலாளர், உள்துறை செயலாளருக்கு உத்தரவு வந்தது.
இதனால் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலுடன் முதல்வரை சந்தித்துவிட்டு இன்னும் ஓரிரு நாட்களில் டிஜிபி நியமன உத்தரவும், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இட மாறுதல் பட்டியலும் வெளியாகும் என்கின்றனர். இந்த பட்டியலின்படி சென்னை மாநகர ஆணையர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன், ஆவடி மாநகர ஆணையர் சங்கர், தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மோடக் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த மாறுதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலோடு சில ஐ.ஜி.க்கள் மற்றும் எஸ்.பி.க்களும் இடமாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக சென்னை மாநகர ஆணையர் அருண் மாற்றப்படுவார் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு சென்று விட்டதாலும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையின்போது ஆளும்கட்சிக்கு சில சங்கடங்கள் இந்த அதிகாரிகளால் ஏற்படும் என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்ட்டதாலும் இந்த அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்படும்போது சில அதிகாரிகளை மாற்றவேண்டும் என முதல்வரிடம் தெரிவித்துள்ளதால் இந்த அதிகாரிகள் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். இப்போதாவது நிரந்தர டிஜிபியை நியமிக்க முதல்வர் முடிவெடுத்தது சரியானது என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரம்.