எல்லாம் வல்ல இறைவனின் கருணை, அருள், வல்லமை மற்றும் அவனது அடையாளங்கள், அற்புதங்கள், அதிசயங்கள் அனைத்தும் மங்காமல் பிரதிபலித்து நின்று இவ்வுலகில் பறை சாற்ற வைப்பது கோவில்கள், சித்தர்கள் வாழும் ஜீவ சமாதிகள் மற்றும் மகான்கள் அடங்கப்பட்டுள்ள தர்காக்களில்தான். ஊண், உறக்கமின்றி ஏக இறைவனை அடையும் பொருட்டு உலக இச்சைகளை மறந்து, ஆசைகளை துறந்து இறை நேசர்களாக வாழ்ந்து விட்டுச் சென்ற இந்த அவ்லியாக்களின் அடக்கத்தலங்களின் புகழ் எப்போதும் மங்காது என்றும் நிலைத்திருப்பதே அவர்களது ஆன்மிக ஆற்றல்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
உலகம் முழுவதிலும் இறைநேசர்கள் நிறைந்திருந்தாலும் சித்தர்கள், வலிமார்கள் நிறைந்த புனித பூமியாக திகழ்வது சென்னை நகருக்கு கிடைத்த பெரிய கொடுப்பனை என்கின்றனர் ஆன்மிக அறிஞர்கள். பிரார்த்தனை நிறைவேற வேண்டியும், ஞானம் பெறுவதற்காகவும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அஜ்மீர் தர்காவுக்கும், தென்னிந்தியாவில் வாழ்பவர்கள் நாகூர் தர்காவுக்கும் செல்கின்றனர். அதே போல சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் மவுண்ட்ரோடு தர்காவுக்கும், கோவளம் தர்காவுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது.
சென்னை வாசிகள் நம்பிக்கையுடன் வந்து செல்லும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் சர்வ வல்லமை பெற்ற தஸ்தகீர் சாஹிப் தர்கா அடக்கத்தலமாகும்.
பேய், பிசாசு, ஜின்னு ஷெய்த்தான் மிரண்டோடும்
பக்தர்கள் என்ன குறைகளை மனதில் நினைத்து தஸ்தகீர் சாஹிப் தர்காவுக்கு வந்து முறையிட்டு சென்றாலும் அது நிச்சயம் நிறைவேறுகிறது என்ற நம்பிக்கை உள்ளது. செய்வினை, சூனியம், பேய், பிசாசு, ஜின்னு, ஷெய்த்தான்கள் மற்றும் கண் திருஷ்டிகளால் ஏற்படும் பிரச்சினைகள் தஸ்தகீர் சாஹிப் தர்காவில் நொடிப்பொழுதில் விலகி விடுகிறது என்கின்றனர்.
பன்னீர் ரோஜாப் பூ காணிக்கையின் மகத்துவம்
அது மட்டுமின்றி திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைகளும் இங்கு தீர்கிறது. தஸ்தக்கீர் சாஹிப் பாவாவுக்கு பிடித்தமான பன்னீர் ரோஜாப்பூவுடன் வந்து வேண்டினால் நிச்சயம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது அங்கு வந்து செல்லும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
யார் இந்த தஸ்தக்கீர் சாஹிப் பாவா
யார் இந்த தஸ்தகீர் சாஹிப் அவ்லியா, இவர் திருவல்லிக்கேணிக்கு வந்து ஜீவ சமாதியான வரலாறு என்ன என்று பார்த்த போது பிரமிப்பூட்டும் விதமாக இருந்தது.
ஆடம்பரத்தை துறந்து அல்லாஹ்வின் வழியில்…
கிபி 1720 ஆம் ஆண்டுகளில் கர்நாடகா மாநிலம் பீஜெப்பூரில் இருந்து தஸ்தகீர் சாஹிப் சென்னைக்கு வந்துள்ளார். துருக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், பீஜெப்பூரின் ஆதில் ஷாஹி என்ற மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜ குடும்பத்தில் பிறந்து மிகப்பெரும் செல்வந்தரானாலும் தஸ்தகீர் சாஹிப் அனைத்தையும் துறந்தவராக இறைவனை நாடி தனது ஆன்மிகப் பயணத்தை தொடங்கினார்.
அஹ்மத் கபீர் ரிபாஈ தரீக்கா
தஸ்தகீர் சாஹிப்புக்கு சூபிசத்தைக் கற்றுத் தந்த ஞானகுரு கிபி 1703- ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மாபெரும் தவஞானி ஹஜ்ரத் க்வாஜா ரஹ்மத்துல்லாஹ் என வரலாற்றுப் பதிவேடுகள் கூறுகின்றன. நக்ஷபந்தியா தரீக்காவை பின்பற்றிய இவர், நபிகள் நாயகத்தின் திருப்பேரர் அஹ்மத் கபீர் ரிபாஈ ஆண்டவர்கள் தரீக்காவைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
கிபி 1730ல் சென்னைக்கு விஜயம்
நாடு முழுவதும் ஓரிறைக் கொள்கை கோட்பாட்டை பிரசாரம் செய்த தஸ்தகீர் சாஹிப் வலியுல்லா இறுதியில் கிபி. 1730ம் ஆண்டுகளில் சென்னை சென்னை திருவல்லிக்கேணி, நடேசன் சாலைக்கு வந்தார். அங்கு இருந்தபடி ஞான உபதேசங்களை போதித்த அவர் ஷெய்த்தான்களை விரட்டுவது, நோய், பிணிகளை நீக்குவது என பல அதிசயங்களை செய்து காட்டியதால் அவர் சென்னை மக்களால் போற்றப்பட்டார்.
தனது உடலுக்கு தொழுகை நடத்திய பாவாவின் புனித ஆன்மா
1751 ஆம் ஆண்டு, ரஜபு பிறையில் தான் இறக்கப் போவதை தனது தவ வலிமையால் முன்கூட்டியே அறிந்து கொண்டார். தாம் மரணமடைந்தால் வேறு எந்த இமாமும் வந்து தனக்கு ஜனாசா தொழுகை நடத்த வேண்டாம் என்று தம்முடைய சீடர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே இஸ்லாமிய மாதம் ரஜபு பிறை 3ஆம் நாள் அன்று தஸ்தகீர் சாஹிப் இறைவனடி சேர்ந்தார். அவர் மரணித்த பின் அவரது உடலில் இருந்து பிரிந்து சென்ற அவரது ஆன்மா மீண்டும் எழுந்து வந்து தமக்குத் தாமே ஜனாஸா தொழுகை நடத்தியது. இதனைக் கண்ட தஸ்தகீர் சாஹிப்பின் சீடர்கள் அதிசயத்து நின்றனர்.
அடக்கத்தலம் எழுப்பிய நவாப்
பின்னர் தஸ்தகீர் சாஹிப் தனது குடும்பத்துடன் வாழ்ந்த இடத்திலேயே அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது. பிறகு 1789 ஆண்டு நவாப் முஹம்மதலி வாலாஜா தமது சொந்த செலவில் தஸ்தகீர் சாஹிப் அவர்களுக்கு அடக்கத்தலம் எழுப்பினார். சென்னை திருவல்லிக்கேணி, நடேசன் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் சிட்டி சென்டருக்கு மிக அருகாமையில் இந்த தர்கா அமைந்துள்ளது.
அஸர் நேரத்தில் பாவாவின் நறுமணம்
தஸ்தகீர் சாஹிப் வலியுல்லா மறைந்தாலும் அவர் அடக்கத்தலத்தில் புனித ஆன்மாவின் நடமாட்டம் இருப்பதாகவும், தினமும் மாலை நேரத்தில் அஸர் தொழுகை சமயத்தில் அவரது அடக்கத்தில் ரோஜாப்பூ நறுமணம் மூக்கைத் துளைப்பதாகவும். அந்த நறுமணம் நம்மை மெய் மறக்கச் செய்யும் என்கின்றனர் தர்காவை பரம்பரையாக நிர்வாகம் செய்யும் பிரமுகர்கள். அந்த நறுமணத்தை தஸ்தகீர் பாவா தர்காவுக்கு வழக்கமாக வந்து செல்கிறவர்கள் உணர்கின்றனர். அந்த சமயத்தில் தர்காவுக்கு வந்து வேண்டுதல்களை கேட்டால் நிச்சயம் நடக்கிறதாம்.
கணவருக்கு நோய் பிணி நீங்கிய அதிசயம்
மேலும் தீராத வியாதிகளும் இந்த தர்காவுக்கு வந்து சென்றால் தீர்கின்றது. கடந்த பல மாதங்களாக தனது கணவர் நோய் வாய்ப்பட்டு உடல் நலக்குறைவால் காலில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் தஸ்தகீர் சாஹிப் தர்காவின் அற்புதங்கள் பற்றி நண்பர் ஒருவர் மூலம் அந்தப் பெண் கேள்விப்பட்டுள்ளார். தனது கணவரை தஸ்தகீர் பாவா தர்காவுக்கு கடந்த 7 வாரங்களாக அழைத்து வந்து பிரார்த்தித்துள்ளார். அதன் பின்னர் அவரது கணவருக்கு காலில் புண் சரியாகி அவர் பழையபடி நன்றாக நடக்கிறார் என தஸ்தகீர் பாவா தர்காவின் அதிசயம் பற்றி தெரிவித்தார்.
குழந்தை பாக்கியம் கிடைத்த பெண்மணி
அதே போல மற்றொரு பெண், தனக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் தஸ்தகீர் பாவா தர்காவுக்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து மனமுறுகி தனது குறையை தெரிவித்துள்ளார். சில மாதங்களிலேயே அவர் கருவுற்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதிசயித்துப் போன அந்தப் பெண் தஸ்தகீர் பாவாவின் பிரார்த்தனை கிருபையால் தனக்கு அல்லாஹ் குழந்தை வரம் தந்ததாக கூறுகிறார்.
தர்காவில் உள்ள பொக்கிஷம்
தஸ்தகீர் சாஹிப் தர்காவில் இன்னொரு அற்புதமான விஷயம் ஒன்று அங்கு பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயத்தின் பேரர் ஹசன் ரழியல்லாஹ் அன்ஹு அவர்களது திருமேனி தாடியில் உள்ள முடி மற்றும், சூபி நாயகம் அஹ்மத் கபீர் ரிபாயி ஆண்டவர்களின் திருமுகத்தில் உள்ள மீசை முடி ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலும் பக்தர்கள் சென்று முத்தமிட்டு வணங்கி விட்டு செல்கின்றனர். தஸ்தக்கீர் சாஹிப் வலியுல்லாவின் நினைவு தினமான ரஜபு பிறை 3ம் நாள் அன்று வருடாந்திர கந்தூரி விழா விமரிசையாக ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது.
மண்ணறைகளில் ஜீவசமாதியாக இறைவனிடம் பிரார்த்தனை
அவ்லியாக்கள் என்னும், இறைநேசர்கள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் மண்ணறைகளில் ஜீவசமாதி நிலையில் இருந்தபடி தன்னை நாடி வருபவர்களுக்கு இறைவனிடம் மன்றாடி பிரார்த்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகின்றனர். இறைவன் தங்களுக்கு அளித்த சர்வ வல்லமை கொண்டு இந்த உலகம் உள்ளவரை இந்த அவ்லியாக்கள் தங்களது பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் என்பதுதான் அடக்கத்தலங்களுக்கு வந்து செல்லும் பக்தர்களின் மறுக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.