குணங்குடி மஸ்தான் பிறப்பு
குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுல்தான் அப்துல் காதிர்.
17 வயதில் துறவறம்
குணங்குடி மஸ்தான் பாலகராக இருந்தபோதே தீராத இறைக் காதலில் லயித்துப் போய் திருமண வாழ்வை துறந்து இறுதியில் ஞானியாக மாறினார். தனது 17வது வயதிலேயே உலக வாழ்வை துறந்து துறவறம் பூண்டார். வரலாற்று ஆசிரியர்கள் கணிப்பின் படி குணங்குடியார் வாழ்ந்த காலம் காலம் 1788- ஆம் ஆண்டு முதல் 1838 ஆம் ஆண்டு வரை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டையில் ஜீவ சமாதி
ஒரே இறைவனான அல்லாஹ்வை அறியும் பொருட்டு இறை தேடல் பயணமாக நாடு முழுவதும் காடு, மலைகள், குப்பை மேடுகள் என சுற்றி அலைந்து குணங்குடியார் இறுதியில் சென்னை தண்டையார்பேட்டைக்கு வந்து ஜீவசமாதி அடைந்தார். குணங்குடியாரை மக்கள் ‘தொண்டியார்’ என அழைத்து வந்தமையால் சென்னையில் அவர் வசித்து வந்த பகுதி தொண்டியார்பேட்டை என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் தொண்டையார்பேட்டை என மருவி இன்றைக்கு ‘தண்டையார்பேட்டை’ என ஆகி விட்டது.
காதிரிய்யா தரீக்கா வழியில்….
குணங்குடி மஸ்தான் கி.பி. 1805ம் ஆண்டு தனது 17ம் வயதில் ராமநாதபுரம், கீழக்கரை சென்று ‘தைக்காசாஹிபு’ என்று அழைக்கப்பட்ட ஷெய்ஹ் அப்துல் காதிரி லெப்பை ஆலிம் என்ற ஞானியிடம் மாணவராகச் சேர்ந்து ‘காதிரிய்யா தரீக்கா’ ழியில் இறை ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் 4 ஆண்டுகள் கற்றுத் தெளிந்தார்.
மலைகளில் தவம்
தென்தமிழகத்தில் சதுரகிரி மலை, திருப்பரங்குன்றம், சிவகங்கை பிரான்மலை, நாகமலை உள்பட பல இடங்களுக்கு சென்று மாதக்கணக்கில் கடும் தவம் மேற்கொண்டார். கொடிய காட்டு விலங்குகள் அதிக நடமாட்டம் இருக்கும் அடர்ந்த காடுகளில் தனிமையில் பல ஆண்டு காலம் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டார்.
மூச்சை மட்டுமே உணவாகக் கொண்டு…
காட்டுப்பகுதிகளில் குணங்குடியார் தவம் இருக்கும் சமயங்களில் அவர் உணவுக்கு என்ன ஏற்பாடு செய்து கொண்டார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது. வெறும் மூச்சை மட்டுமே உணவாக சுவாசித்து அவர் தவம் செய்தது மாபெரும் அதிசயமாக கருதப்படுகிறது. புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகில் கலகம் என்ற ஊருக்கு குணங்குடி மஸ்தான் வந்து சென்றதாகவும் பதிவுகள் கூறுகின்றன.
அடர்ந்த காட்டில் தலைகீழாக தொங்கியபடி….
மற்றொரு திகில் சம்பவம் தொடர்பான கருத்துக்களும் பேசப்படுகின்றன. குணங்குடி மஸ்தான் சாஹிப் வனப்பகுதியில் தவம் இருப்பதை தெரிந்து கொண்ட சிலர் அவரை தேடிச் சென்று பார்க்க முயன்றுள்ளனர். அப்போது குணங்குடியார் அங்குள்ள ஏதாவது ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுடனும், அதிசயத்துடனும் திகிலுடன் திரும்பியுள்ளனர். சுமார் 7 ஆண்டுகள் வரை குணங்குடி மஸ்தான் காடுகளில் தவம் இருந்து கழித்ததாக கருத்துக்கள் நிலுவுகின்றன.
வழி நடத்திய போகரின் ஆன்மா
மேலும் இன்னொரு சுவாரஷ்ய தகவலாக பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரின் ஆன்மா குணங்குடி மஸ்தானை ஆன்மிக வழியில் நடத்திச் சென்றதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.
குணங்குடியாருக்கு இடம் அளித்த பாவா லெப்பை
தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் சென்று குணங்குடியார் தனது ஞான உபதேசங்களை தொடர்ந்தார். இறுதியில் சென்னைக்கு வந்து தண்டையார்பேட்டையில் பாவா லெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும், மூங்கில் காடும், சப்பாத்திக் கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் குணங்குடி மஸ்தான் தங்கி தனது இறை சேவையைத் தொடர்ந்தார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமையை உணர்ந்து அந்த இடத்திலேயே அவருக்கு தங்குவதற்கு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தார்.
பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் சீடராகினர்
குணங்குடியாரின் துறவு நிலையில் சந்தேகமடைந்த சிலர் அவர் நிகழ்த்திய பல அதிசயங்களை கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் ஞான தீட்சை பெற்றனர். குணங்குடியாரிடம் ஞான தீட்சை பெற்றவர்களில் அந்தக் காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் குணங்குடியாரின் சீடர்களாக இருந்து அவரை பின்பற்றினர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
குணங்குடியாரை கனவில் கண்ட பக்தர்கள்
குணங்குடி மஸ்தானின் பூ உடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் மண்ணறையில் இருந்தபடி, வெளி உலகில் வாழும் தனது பக்தர்களுக்கு அவ்வப்போது தத்ரூப காட்சியளிக்கிறார் என அதனைக் கண்டவர்கள் கூறுகின்றனர். குணங்குடியாரை கனவிலும், தங்கள் ஞானத்தால் கண்டவர்களும் அவரது தோற்றம் தர்காவில் உள்ள புகைப்படம் போன்றுதான் இருந்தது என கூறுகின்றனர். இதனால் குணங்குடி மஸ்தான் தர்காவில் குணங்குடியார் மண்ணறையில் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என நம்புகின்றனர் அங்கு வாடிக்கையாக வரும் பக்த கோடிகள்.
1838ம் ஆண்டு ஜீவ சமாதி
குணங்குடி மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு அதாவது இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி 1254 ஜமாத்துல் அவ்வல் மாதம் 14ம் நாள் தனது 50 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்து ஜீவ சமாதியானார் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இன்னும் சில பதிவுகளில் குணங்குடியார் தனது 47வது வயதில் மறைந்ததாகவும் கூறப்படுகிறது, அவர் தங்கியிருந்த தண்டையார்பேட்டையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அதுதான் இன்று குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவாக திகழ்கிறது. குணங்குடியாரின் தோழர் புலவர் நாயகத்தின் அடக்கத்தலமும் இங்குதான் உள்ளது.
ஊமையப்பா அடக்கத்தலம்
இவர்கள் இருவரின் அடக்கத்தலத்தை அடுத்தாற்போல் அங்கேயே ஊமையப்பா என்கிற ஹஸ்ரத் ஷேக் இப்ராஹிம் ஜீவசமாதியும், அவருக்கு பணிவிடை செய்து வந்த காதர் மஸ்தான் மற்றும் அவரது மனைவி மதார் பீவி அம்மா ஆகியோரது புனித அடக்கத்தலங்களும் இங்கு உள்ளன. ஆண்டுதோறும் குணங்குடியார் ஜீவசமாதியான அன்று சந்தனக்கூடு உரூஸ் கந்தூரி விழா 14 நாட்கள் கோலாகலமாக நடந்து வருகிறது.
இறைநேசர்களுக்கு அழிவில்லை
‘இறை நேசர்களுக்கு என்றும் அழிவில்லை. அவர்கள் மண்ணறைகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பதற்கேற்ப இவ்வுலகில் வாழ்ந்து மறைந்து பல நூற்றாண்டு காலங்கள், ஆனாலும் இறை நேசர்களின் புகழ் மங்காது என்பதற்கு குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்கா வரலாறு சிறந்த உதாரணமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.