அதி­முக காட்­டிய பச்சைக் கொடி: அடுத்­தக்­ கட்­டத்­துக்கு நக­ரும் விஜய்

13

கரூர் பலி சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய ஆளும்கட்சியும், காவல்துறையும் தீவிரம் காட்டிவரும் சூழ்நிலையில் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்களுடன் வந்தால் துணை முதல்வர் பதவி வழங்க தயார் என அதிமுக வட்டாரம் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகி உள்ளது.

கடந்த ஒண்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்குள் மாநில மாநாடு, மாவட்டம்தோறும் தேர்தல் பிரச்சாரம் என வேகம் காட்டினார் விஜய். இவரது பொதுக்கூட்டங்களுக்கும், மாவட்டத்தில் கூடிய பல லட்சம் கூட்டமும் ஆளும்கட்சியை மட்டுமின்றி எதிர்கட்சிகளையும் மிரள செய்தது. கட்சி தொடங்கி முதல் கூட்டத்திலேயே மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திமுக மீதும் கடும் விமர்சனங்களை அடுக்கினார். இது மத்­திய, மாநில அரசுகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் விஜய் பிரச்சாரம் எந்த வகையில் தொண்டர்களையும், பொதுமக்களையும் ஓட்டுகளாக்கும் என அனைத்து கட்சிகளும் கவனிக்க தொடங்கின.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முன்னோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் திருச்சி துறையுயூரில் ஆரம்பித்து, திருவாரூர், நாமக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்கு திரண்ட பல லட்சம் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் ஆர்வம் எல்லா கட்சிகளுமே சற்று பீதியை ஏற்படுத்தியது உண்மை.

கடந்த 2 கூட்டங்களாக ஆளும் திமுக அரசு மீதும், முதல்வர் மற்றும் குடும்பத்தினர் மீதும் நேரடியாகவே ஊழல் குற்றச் சாட்டை வைத்து விஜய் பேசியது பொதுமக்களின் ஆதரவை பெற்ற நிலையில், ஆளும்கட்சி மேலிடத்தை கடும் சூடாக்கியது. திருச்சி கூட்டத்திற்கு ஈடாக கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு லட்சம் பேரை திமுக முப்பெரும் விழாவிற்கு கூட்டியதோடு, விஜய்க்கு நேரடியாக திமுக நிர்வாகிகள் சவால் விடுத்தனர்.

திரைப்படங்களில் வில்லன்களின் சவாலை ஏற்று கதாநாயகன் விஜய் வெற்றிபெறுவதை போலவே திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகளின் சவாலை ஏற்று கரூரிலேயே திமுகவை விட அதிக கூட்டத்தை கூட விஜய் முடிவெடுத்து சுற்றுப்பயண திட்டத்தையே மாற்றினார். ஆனால் இந்த சுற்றுப்பயணம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையையே மாற்றி அமைக்கப்போகிறது என்பதை விஜய் அறியவில்லை. அரசியலில் கரை கண்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் போட்டி போட்ட நிலையில் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியான சம்பவத்தால் விஜய் பிரச்சாரத்தையே தற்காலிகமாக நிறுத்த நேரிட்டது.

இந்த சம்பவத்தை வைத்தே விஜய் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளும் மேலிடம் பல்வேறு வகையிலும் செக் வைக்க தொடங்கியது. திமுக போட்ட சக்கர வியூகத்திற்குள் சிக்கி விஜய் எவ்வாறு வெளியே வருவது என திணறிய நிலையில் யாரை எல்லாம் தாக்கி பேசினாரா அவர்களே தாங்களாகவே வந்து கை கொடுத்ததால் கைது உள்ளிட்ட பெரிய சிக்கலில் இருந்து விஜய் தப்பியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் இந்த சம்பவத்திற்கும், விஜய்க்கும் தொடர்பு என கூறுவது தவறு. எந்த அரசியல் தலைவரும் தங்கள் கண் முன்பாக தொண்டர் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில் பலர் உயிரிழந்தது வருந்தத்தக்கதே. ஆனால் இந்த சம்பவத்தில் ஆளும்கட்சியின் சதியும் உள்ளது. எனவே இந்த சதி சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தார்.

இதன்பிறகு பாஜ கட்சி முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சென்றதோடு, மத்தியில் இருந்து வந்த பாஜ எம்.பி. குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்று இந்த விபத்தின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என குரல் கொடுத்தார். மேலும் காவல்துறையினரின் அஜாக்ரதையே இந்த விபத்திற்கு காரணம் என்றும் அண்ணாமலை கூறிய பிறகே பொதுமக்களும், நடுநிலையாளர்களுக்கும் விஜய் மீதான கோபம் குறைந்தது.

இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் விஜய்க்கு எதிராக திரும்பும் என ஆளும்கட்சி எதிர்பார்த்த நிலையில் அதிமுக, பாஜ கட்சிகளின் ஆதரவினால் பிரச்சினை ஒட்டுமொத்தமாக திசை திரும்பிவிட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவட்ட முக்கிய பிரமுகரின் கைங்கர்யம் இருப்பதாக பொதுமக்கள் பேச தொடங்கிவிட்டதோடு, விஜய்க்கு ஆதரவும் பலமடங்காக அதிகரித்துவிட்டது.

இந்த பிரச்சினையில் இருந்து எப்படி விடுபடுவோம் என விஜய்யே திணறிய நிலையில் இந்த காட்சிகள் கொடுத்த ஆதரவு அவரது மனநிலையில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். தனித்து போட்டியிட்டு அதிமுக கூட்டணிக்கு தன்னால் தோல்வி ஏற்பட்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தனது எதிர்காலம் மிக கடினமாகிவிடும். அரசியல் சதுரங்க விளையாட்டில் தனித்து விளையாடுவதை விட கூட்டு சேர்ந்து திமுகவை எதிர்த்தால் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற முடிவுக்கு விஜய் வந்துவிட்டார்.

அதே நேரம் பாஜக கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை முற்றிலும் இழக்க வேண்டும். அதிமுகவுடன் மட்டுமே கூட்டு என்ற நிலையை எடுத்தால் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடைய முடியும் என கட்சி பிரமுகர்களுடன் நடந்த ஆலோசனையில் கூறியுள்ளார். எனவே பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி தன்னுடன் கூட்டணி சேர்ந்தால் தானும் கூட்டணிக்கு தயார் என்ற மனநிலைக்கு விஜய் வந்துவிட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயுடன் பேசி எந்த உதவியாக இருந்தாலும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளதால் மத்திய அரசை இனி கடுமையாக விமர்சிக்காமல், ஆளும்கட்சி மீதான தாக்குதலை மட்டும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளாராம். விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து அதிக சீட்டுகளை கொடுக்கவும் எடப்பாடி ஓ.கே. சொல்லிவிட்டாராம். அதிக சீட்டுகளில் த.வெ.க வெற்றிபெற்றால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கூட கொடுக்கலாம். எப்படியும் திமுக மீண்டும் வெற்றிபெறாமல் தடுக்க வேண்டும் என எடப்பாடி எண்ணுகிறாராம்.

தனியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்ட விஜய்யை கூட்டணிக்கு ஆளும்கட்சியே அழைத்துச்செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் சுற்றுப்பயணத்தை பற்றி கவலைப்படாமல் ஆளும்கட்சி தங்கள் திட்டங்களை பற்றி பேசி இருந்தாலே போதும். விஜய்யை முடக்குவதாக எண்ணி அவருக்கு எதிராக செய்ய வேலைகள் தங்களுக்கே எதிராகிவிட்டது. குறிப்பாக கரூரில் நடந்த சம்பவம் ஆளும்கட்சிக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கி விட்டது. ஆளும்கட்சி கூட்டணியில் உள்ளவர்களே திமுகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளனர்.

திமுக போட்ட கணக்கு தவறானதுடன், விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு செல்ல மேலிடமே காரணமானது தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் இருந்தாலும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதிப்பது நல்லதல்ல. விஜய் விவகாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு தேர்தலை சந்திக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் திமுக நிர்வாகிகள். ஆக மொத்தத்தில் விஜய், அதிமுக கூட்டணிக்கு கரூர் சம்பவம் முக்கிய காரணமாகிவிட்டதாக கூறுகின்றனர்…