தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டிருந்த திமுக புதிய எதிரிகள் என முதல்வரே கடிதத்தில் குறிப்பிட்டு சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சிகளும் நன்கு அசைத்து பார்த்துவிட்டது. இவரால் வரும் சட்டமன்ற தேர்தலில் வாஷ் அவுட் ஆகப்போவது யார் என்ற விவாதமும் எழுந்துவிட்டது. யார் எதனை கூப்பாடு போட்டாலும், கதறினாலும் முன்னேறி செலவோம் என தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.
தவெக என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடத்தி தமிழக அரசியல் கட்சிகளை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த மாநாட்டை போலவே 7 மண்டலங்களிலும் மாநாட்டை நடத்தப்போவதாக விஜய் அறிவித்து இரண்டாவது மாநாட்டையும் மதுரையில் பிரமாண்டமாக நடத்தி காண்பித்துவிட்டார்.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் என்றே கூறலாம். இருப்பினும் நடிகர் என்பதால் இந்த கூட்டம் வருகிறது. இவருக்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக போவதில்லை. வெறுமனே கூட்டம் கூடி விசிலடித்துவிட்டு செல்லும் கூட்டம் என ஆளும்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே கிண்டலடித்தனர். இது விஜய்யை சீண்டிவிட்டது என்றே கூறலாம். விஜய் மக்களை நேரடியாக வந்து சந்திக்கவே மாட்டார். வெளியிலேயே வராமல் இவர் அரசியல் செய்கிறார். இவரது அரசியல் வெற்றி பெறாது என அடுத்த குற்றசாட்டை எழுப்பினர் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும்.
இவர்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக விஜய் அதிரடியாக அறிவித்தார். இதற்காக பிரசார வேனையும் தயார் செய்தார். முதல் கூட்டத்தை திருச்சி முசிறியில் இருந்து தொடங்குவதாகவும், அடுத்ததாக பெரம்பலூரில் கூட்டம் நடக்கும் எனவும் அறிவித்தார். முசிறியில் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி கேட்டபோது கடைசி நேரம் வரை அனுமதி தராமல் இழுத்தடித்தனர்.
ஒருவழியாக போராடி அனுமதி கிடைத்தாலும் ஏராளமான நிபந்தனைகளை போலீசார் விதித்தனர். இதுவரை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ரோட் ஷோ நடத்திய போதெல்லாம் எந்த நிபந்தனையும் விதிக்காத போலீசார் விஜய்யின் நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 19 நிபந்தனைகளை விதித்தனர். இதற்கு ஆளும்கட்சியின் தூண்டுதலே. காவல்துறை மூலம் தங்களுக்கு கூட்டம் கூடுவதை தடுக்கவே ஆளும் கட்சி பல்வேறு தடைகளை போடுகிறது என கட்சி நிர்வாகிகள் கொந்தளித்தனர்.
திருச்சி முசிறியில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் தனி விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டார். இவர் சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன்பே திருச்சி விமான நிலையத்தில் பல ஆயிரம் ஆண், பெண் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்து விட்டனர். இவர் விமானத்தில் இருந்து கீழே இறங்கி வேன் மூலம் முசிறி செல்லும் வரை பாதை இருமங்கிலும் தொண்டர்கள் பல்லாயிரம் பேர் குவிந்து வேன் இன்ச் பை இஞ்சாக நகரும் நிலை உருவானது. இதனால் தான் பேச வேண்டிய இடத்திற்கு வரும்போது பல மணி நேரம் தாமதமாகிவிட்டது. இவரது கூட்டத்தில் திமுக அறிவித்த பல்வேறு அறிவிப்புகளும் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது.
வெற்று மாடல் அரசு என விஜய் கடுமையாக தாக்கி பேசினார். முசிறியிலிருந்து பெரம்பலூருக்கு செல்லும்போது நள்ளிரவிற்கு மேலானதால் அவரால் பேச முடியாமல் திரும்பி விட்டார். நள்ளிரவிற்கு பிறகும் கூடியிருந்த கூட்டம் எல்லா கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது என்றே கூறலாம். இதுவரை நடிகர் என்ற கவர்ச்சிக்காக வந்த கூட்டம் என கேலி செய்த ஆளுகட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை கூடிய பல ஆயிரம் கூட்டத்தால் அதிர்ந்து போய்விட்டனர் என்றே கூறலாம்.
இதுவரை விஜய் திமுக மீது நேரடியாக தாக்கி பேசியபோதும், “அங்கிள் ” என கேலி செய்த போதும் நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுக்காமல் மூத்த தலைவர்கள் மூலம் பதிலடி கொடுத்து வந்தார். ஆனால் கரூரில் நடக்க உள்ள திமுக முப்பெரும் விழாவில் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைவராக எழுதிய கடிதத்தில் பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எக்கு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது என நேரடியாக விஜய்யை தாக்கிஇருந்தார் ஸ்டாலின். இதேபோல கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழாவிலும், திமுக அறிவித்த எந்த அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை என இங்கே வயிற்றெரிச்சல் காரணமாக விமர்சனம் செய்வதாகவும் விஜய் மீது நேரடி தாக்குதலை தொடங்கினார்.
முதல்வரின் இந்த தாக்குதலுக்கு விஜய்யும் நேரடியாக பதில் கூறும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜய் வெளியே வரமாட்டான் என ஆள் வைத்து கதை கூறியவர்கள் இப்போது வெவேறு விதமாக புலம்ப தொடங்கிவிட்டனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வதை போல தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் வழியாக வெளிப்படுத்தியிருந்தனர். புதிய எதிரிகள் என பெயர் சொல்லாமல் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது. பழையன கழிதலும், புதியன புகுதலும் பழந்தமிழ் மரபு.
இன்னும் என்னென்னவோ வெறுப்பையும், விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன. வெளியே கொள்கை என பேசிவிட்டு உள்ளுக்குள் பாரதிய ஜனதாவுடன் உறவாடுவது யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டனர். கொள்கை கூப்பாடு போட்டு கொள்ளையடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன? பொய் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு கேள்வி கேட்டு தங்களது உரிமைகளுக்காக போராடும் சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் திமுகவும், விஜய்யும் நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை உருவாக்கி விட்டது. கடந்த காலங்களில் எம்.ஜி.யாருக்கு கூடும் கூட்டத்தைப்போலவே விஜய்க்கும் கூட்டம் கூடுகிறது. இது ஒட்டு போடும் கூட்டமாகவும் மாறிக்கொண்டுள்ளது. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் பலத்த பாதிப்பை சந்திக்க நேரிடும். சிறிய காட்சிகள் காணாமல் போய்விடும். புயலில் அடித்த காகிதங்களை போல தனித்து போட்டியிடுவோம் என கூறும் கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலில் காணாமல் போய்விடும். விஜய் தனித்தே போட்டியிட்டாலும் பல இடங்களில் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என அரசியல் நோக்கர்கள் கணிக்க தொடங்கிவிட்டனர்.
இதுவே ஆளும்கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. விஜய்யை வளர விடுவது தங்களுக்கு நல்லதல்ல என மேலிடத்திற்கு உளவுத்துத்துறையும் அறிக்கை கொடுத்துள்ளது. எனவே விஜய்க்கு இடையூறு கொடுத்து பிரசாரம் செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என ஆளும்கட்சி திட்டமிட தொடங்கிவிட்டது. இவர்களுக்கு ஆதரவாக சீமான் போன்றோரும் விஜய் மீது தாக்குதலை தொடங்கி விட்டனர். இது விஜய்யின் வளர்ச்சியையே காட்டுகிறது.
இன்னும் 3 மாதங்கள் பல்வேறு கூட்டங்களில் விஜய் பங்கேற்க திட்டமிட்டுள்ள நிலையில், தேர்தலின் பொது ஒவ்வொரு மாவட்டமாக பிரசாரம் மேற்கொள்வர். இது கண்டிப்பாக எல்லா கட்சிகளுக்கும் பலத்தை பாதிப்பை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகளையே மாற்றும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும். இதனால் விஜய் மீதான ஆளும்கட்சியின் தாக்குதல் மேலும் பலமடங்கு அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர் ஆளுகட்சியினர்.