ஸ்ரீகாந்த்தை அடுத்து சிக்கப்போகும் ஸ்டார் விஐபிக்கள் யார் யார்?…. பதை… பதைக்கும்… தமிழ் சினிமா….

208

மும்பை திரையுலகில் சுஷாந்த் சிங் மரணத்தின் போது பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் சரளமாக இருப்பது வெளியுலகுக்கு தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டது பாலிவுட்டையே பரபரக்க வைத்தது.

இதன் தொடர்ச்சியாக ரஜினியின் கபாலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்ட பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி போதைப் பொருள் வழக்கில் சிக்கியது சினிமா உலகையே அதிர வைத்தது. அதனைடுத்து கடந்த ஆண்டு சிக்கிய ஜாபர் சாதிக்…. அவரையடுத்து தற்போது நடிகர் ஸ்ரீகாந்த்.

பெட்டிக்கடை வரை சென்ற மெத், கொக்கைன்

தினசரி பயன்படுத்தும் வெற்றிலைப் பாக்கு, சிகரெட், போல… கஞ்சா, மெத்தம் பெடமைன்… தற்போது தமிழகத்தில் தினமும் புழங்கும் போதை வஸ்துக்களில் மெத்தும், கொக்கய்னும் ஒன்றாகி விட்டது. நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளில் மட்டுமே இடம்பெற்று வந்த மெத்தம்பெடமைன், கொக்கைன் போதைப்பொருட்கள் தற்போது கஞ்சா, குட்கா போன்று பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அளவுக்கு மோகம் அதிகரித்து விட்டது.

போதை அரக்கனின் பிடியில்…

கோடிகளில் சம்பளம், புகழ், கவர்ச்சி, விஐபிக்களின் தொடர்பு, ஸ்டார் ஓட்டல், சொகுசு பங்களா, பகட்டான வாழ்க்கை என்று ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என தெரியாமல் சினிமாத் தொழிலில் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகவும், மேல் மட்ட அறிமுகங்களுக்காகவும் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் நடிகர், நடிகைகள். அவர்களில் சிலர் இது போன்ற போதை அரக்கனின் பிடியில் வீழ்ந்து விடுகிறார்கள்…. குறிப்பாக பணப்புழக்கம் அதிகம் நடக்கும் சினிமாத் துறையில்தான் இந்த விபரீத போதைக் கலாச்சாரம் பெரிய அளவில் பெருகி வருகிறது… அது ஒரு படி கீழே இறங்கி நடுத்தரவாதிகளையும் சீர்குலைக்கும் என்ற சூழல்…

கமிஷனர் அருண் உருவாக்கிய தனிப்படை

சென்னை நகரில் மெத்தம்பெடமைன், கொக்கைன் போதை வஸ்துக்களின் நடமாட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதை உளவுத்துறை அறிக்கையின் பேரில் களையத் தொடங்கியுள்ளார் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண். அவரது நேரடி மேற்பார்வையில், சென்னை நகர நுண்ணறிவுப்பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜன் தலைமையில் ANIU எனப்படும் ANTI NORCOTICS INTELLIGENCE UNIT என்ற தனிப்படையை புதிதாக உருவாக்கியுள்ளார் அருண்.

போலீசின் கழுகு பார்வையில் சிக்கிய ஸ்ரீகாந்த்

இந்த தனிப்படை சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் ஜல்லடை போட்டு கழுகு பார்வை போட்டதன் விளைவு பிரபல சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் போதை விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் உள்ளது வெளியாகி தமிழகத்தை சினிமாவுலகத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

நுங்கம்பாக்கம் பாரில் அதிர்ச்சி…

கடந்த மே மாதம் 22ம் தேதியன்று நுங்கம்பாக்கம் தனியார் பாரில் நடந்த தகராறில் வழக்கம் போல விசாரணைக்கு சென்ற நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு அங்கு மெத், கொக்கய்ன் போன்ற சர்வதேச போதை வஸ்துக்கள் சர்வசாதாரணமாக புழங்கப்படுவதை கண்டதும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர். கைது செய்யப்பட்ட 9 பேரில் முன்னாள் அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் பிரசாத், அஜய் வாண்டையார் மற்றும் சில கானத்தூர் ரவுடிகள் இந்த போதை வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்த அதிர்ச்சித் தகவல்களையும் துருவி கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய, அதிமுகவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பிரசாத்திடம் தொடங்கிய போதை நெட்ஒர்க்

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்தின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதனை தீர ஆய்வு செய்தபோது கொக்கைன் போதைப் பொருள் கடத்தல் நபர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதை மோப்பம் பிடித்தனர். பிரசாத்துக்கு கொக்கய்ன் சப்ளை செய்வது அவரது நெருங்கிய நண்பரான சேலம் பிரதீப் குமார் மற்றும் ஆப்பிரிக்கா கானாவைச் சேர்ந்த ஜான் என்பதை முடிவு செய்த போலீசார் முதலில் அவர்களை தட்டித் தூக்க முடிவு செய்தனர்.

தப்பிய ஆப்பிரிக்கா காரரும் சிக்கினார்

கடந்த 17ம் தேதியன்று அவர்களிடம் கொக்கய்ன் வியாபாரி போல பேசி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வரவழைத்துள்ளனர். போலீசார் போட்ட டீக்காயில் பிரதீப்குமார் வசமாக சிக்கிக் கொள்ள ஜான் தப்பி விட்டார். ஆனால் மறுநாளே ஓசூரில் பதுங்கியிருந்த ஜானையும் போலீசார் அலேக்காக தூக்கி விட்டனர். இவர்களிடம் இருந்து 11 கிராம் கொக்கைன், ரொக்கம் ரூ. 50 ஆயிரம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்.

ஐந்து ஆண்டுகளாக கொக்கைன் பிஸ்னஸ்

பிரதீப்குமாரை கஸ்டடி எடுத்து போலீசார் ‘கிடு’க்கிய போதுதான், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கழுகு பட நடிகர் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் ஸ்ரீகாந்துக்கும், அதிமுக பிரமுகர் பிரசாத்துக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதீப் குமார் கொக்கைன் சப்ளை செய்து வந்துள்ளார்.

பார்ட்டியில் சப்ளை

பிரசாத் “தீங்கரை” என்ற திரைப்படத்தை மூன்று பேரோடு இணைந்து தயாரித்து வந்த போது அதில் ஹீரோவாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த்துடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு பிரசாத் பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் கொக்கைன் போதை பிரதானமாக இடம்பெற்றுள்ளது. அதற்காக பிரதீப்குமார் பெங்களூருவில் இருந்து கொக்கைனை வாங்கி வந்து லட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளார். மேலும் பிரதீப்குமாரின் நண்பரான தனியார் கல்லூரி ஊழியர் லிங்கேஸ்வரன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் கொக்கைன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து…

2020ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுன் சமயத்தில் தனது கொக்கைய்ன் பிஸ்னசை பிரதீப் குமார் தொடங்கியுள்ளார். டாஸ்மாக் மூடப்பட்டதால் கொக்கைன் பிஸ்னஸ் சூடுபிடித்து லட்சக்கணக்கில் பணம் கொட்டத் துவங்கியுள்ளது, பிரதீப்குமார் பெங்ளூரூக்கு சென்று கொக்கைன் வாங்கி வந்து சென்னையில் உள்ள நண்பர்களுக்கு விற்று பணம் பார்த்துள்ளார். பெங்களூருவில் வைத்துத்தான் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஜானுடன் அறிமுகமாகி தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.

ஸ்ரீகாந்துக்கு வேண்டும் என்று பர்ச்சேஸ்

பிரதீப், பிரசாத்துக்கு கொக்கைன் போதைப்பொருள் கொண்டு வந்து கொடுக்கும் போது நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இருப்பார். அவருக்கு வேண்டும் என்று தான் பிரசாத் வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரசாத் ஏற்பாடு செய்த பார்ட்டிக்கு பிரதீப்குமார் கொக்கைன் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார். அந்த பார்ட்டியில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது காவல் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

கூகுள் பே மூலம் வியாபாரம்

பிரசாத்திற்கு மட்டும் 2023 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 முறைக்கு மேல் பிரதீப்குமார் கொக்கைன் சப்ளை செய்து அதற்காக கூகுள்பே மூலம் மட்டும் ரூ. 4.50 லட்சம் வரை சம்பாதித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் உட்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ள நுங்கம்பாக்கம் போலீசார் அவர் மூலம் வேறு யாருக்கெல்லாம் கொக்கைன் சப்ளை சென்றுள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் யாரெல்லாம் சிக்குகின்றனர்…

நடிகர் கிருஷ்ணாவும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து இளம் நடிகர்கள் 3 பேர், ‘ஸ்லிம்’ மியூசிக் பார்ட்டி ஒருவர் என மொத்தம் 4 பேரின் பெயர்களும் இந்த கொக்கைன் வாங்கியவர்களின் பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் சிக்கியது தற்போது சினிமா வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பான ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.