உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் “டிஸ்மிஸ்”: தனி கட்சி தொடங்குவாரா அன்புமணி ???

24

அரசியல்வாதி என்பதற்கு அன்புமணி தகுதியற்றவர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி 2 முறை வாய்ப்பு வழங்கியும் விளக்கம் அளிக்காததால் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அன்புமணி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், செயல் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்படுகிறார். இனி தனது பெயரில்கூட ராமதாஸ் என சேர்த்து பயன்படுத்தக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் அன்புமணி விரைவில் தனி கட்சி தொடங்குவார் என்கிறது பாமக வட்டாரங்கள்.

பாமக செயல் தலைவர் அன்புமணிக்கும், கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாசுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்தது. மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டில் இந்த கருத்து வேறுபாடு அதிகரித்து ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர ராமதாஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், பாஜக கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என அன்புமணி வற்புறுத்தியதால்தான் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுதான் கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டைப்போல சித்தரிக்கப்படுகிறது. ராமதாஸின் மற்றொரு குடும்பத்தால் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பெரிய பிரச்சினை உருவாக்கி உள்ளது. மற்றொரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிடுவதாகவும், அவர்கள் சொல்படி ராமதாஸ் கேட்க தொடங்கியதால் அன்புமணியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்துவேறுபாடு ஏற்பட்ட பிறகு ராமதாஸ் கடந்த மே மாதம் 16ம் தேதி கூட்டிய பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்ற நிர்வாகிகள் ராமதாஸ் கூடிய கூட்டத்தை புறக்கணித்ததால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதேபோல ராமதாஸுடன் இருந்தவர்களை தான் கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாசும் அறிவித்தார். இருவரும் போட்டிபோட்டு கட்சி நிர்வாகிகளை நீக்கிய நிலையில் கடந்த மாதம் அன்புமணி கட்சி செயற்குழுவை கூடுவதாக கூறி தானே கட்சியின் செயல் தலைவராக நீடிப்பதாக அறிவித்தார். ஆனால் ராமதாஸ் தரப்பும் செயற்குழு கூட்டத்தை கூட்டி கட்சியின் எந்த முடிவு எடுக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராமதாஸ் அறிவித்துக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில்தான் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி தைலாபுரத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அன்புமணி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சட்டவிரோதமாக பாமக நிர்வாகிகளை நீக்கி வருவது உள்ளிட்ட 16 குற்றசாட்டுகளை கூறி இதற்கு 10-க்குள் நேரிலோ, கடிதம் மூலமோ விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் கட்சியில் நிர்வகிக்க குழு கூட்டம் மீண்டும் கூடி அன்புமணி உரிய விளக்கம் அளிக்காததால் அவர் மீது ராமதாஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என ராமதாசுக்கு அனுமதி வழங்கியது.

திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள வீட்டில் பேட்டியளித்த ராமதாஸ், அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால் எந்த விளக்கமும் அன்புமணி அளிக்கவில்லை. எனவே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், செயல் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கிறேன். 2 முறை பதில் அளிக்க அவகாசம் வழங்கியும் நேரில் வந்தோ, கடிதம் மூலமோ பதில் அளிக்கவில்லை. எனவே பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார். அன்புமணியுடன் சேர்ந்து இருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன். அவர்கள் மனம் திருந்தி மீண்டும் பாமாவிற்கு வந்தால் சேர்த்துக்கொள்ள தயார். என்னுடன் சேர்ந்து செல்லும்படி கட்சி மூத்த தலைவர்கள் அன்புமணிக்கு அறிவுரை கூறியும் கேட்கவில்லை. அன்புமணி அரசியல்வாதி என்பதற்கான தகுதியே இல்லாதவர். இனி இரா. என்ற இனிசியலை மட்டுமே தன்னுடைய பேருடன் சேர்க்க வேண்டும். தன்னுடைய பேருக்கு பின்னால் ராமதாஸ் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என ஆவேசத்துடன் கூறினார்.

இதன்மூலம் அன்புமணியும், அவருடன் இருந்தவர்களும் கட்சி பொறுப்பில் இருந்து மட்டுமின்றி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டனர். இனி கட்சி கொடி, பெயரை பயன்படுத்த முடியாது. தொடர்ந்து பயன்படுத்தினால் இவர்கள் மீது ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடர முடியும். தன்னை கட்சியிலிருந்து ராமதாஸ் கண்டிப்பாக நீக்குவார் என்பதை அன்புமணி எதிர்பார்த்திருந்தார். எனவே புதியதாக கட்சி தொடங்கவும், வன்னிய அமைப்பை தொடங்கி தந்தைக்கு போட்டியாக கட்சி தலைவராக முடிவெடுத்துள்ளார்.

மேலும் பாமக சின்னத்தை முடக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினால் மாம்பழ சின்னம் முடக்கப்பட்டுவிடும். வரும் தேர்தலில் தந்தையும், மகனும் இருவேறு கூட்டணியில் போட்டியிடுவார். பாமக ஏற்கனவே ஓட்டுவங்கியை இழந்துவிட்ட நிலையில் இருவரையும் யார் முக்கிய காட்சிகளில் சேர்ப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடும்ப பிரச்சினையை கட்சி பிரச்சினையாகி கட்சி உடைவதற்கு தந்தையும், மகனும் காரணமாகி விட்டார்களே. பாமக கட்சியின் வாக்கு சதவிகிதத்தை கண்டு அஞ்சிய காட்சிகள் இனி நம்மை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என புலம்பி தவிக்கின்றனர் நிர்வாகிகளும், தொண்டர்களும். கட்சி எதிர்காலம் இனி என்னவாகுமோ தெரியவில்லை என்ற புலம்பலும் கேட்கிறது.